மஹிந்தவின் உறுப்புரிமை நீக்கப்பட்டது

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்றுப்போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்புரிமை இயல்பாகவே இரத்தாகி விட்டதென நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இவ்விடயம் குறித்து எதிர்வரும் வாரம் நடைபெறவுள்ள சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த அமரவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கட்சிக்கென்று யாப்பொன்று காணப்படுகிறது. அதன்படி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினூடாக தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு  தெரிவாகிய மஹிந்தவுடைய உறுப்புரிமை அந்த யாப்பிற்கமைய இயல்பாகவே இரத்தாகிவிடும்.

ஆகவே, தற்போது அவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் கிடையாது. மேலும் பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை ஏற்றமைக்காக, அவருக்கு எதிராக ஒழுகாற்று நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.

இதற்கு காரணம் பொதுஜன பெரமுனவுடனான கூட்டணி தொடர்பில் இன்னும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அடுத்த வாரம் கூடவுள்ள கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இது குறித்து ஆராயப்படும்.

இதனபோது எடுக்கப்படும் தீர்மானத்தின் அடிப்படையிலேயே மஹிந்த ராஜபக்ஷவினது எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்த சர்ச்சைக்கும் தீர்வு எட்டப்படும்” என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்