புத்தாண்டுக்கு பின்னர் 123,779 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது!

நாட்டில்  நேற்று (13) காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில்  2,354 கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளர்.

வெளிநாட்டைச் சேர்ந்த இருவர், வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 12 இலங்கையர்கள் மற்றும் நாட்டில் 2,340 பேர்  உள்ளடங்கலாக 2354பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் 561 தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளனர்.அத்தோடு கொழும்பு மாவட்டத்தில் 528 தொற்றாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 313 தொற்றாளர்களும் மற்றும் ஏனைய மாவட்டங்களில் 938 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

நேற்று காலை வரையில் கொவிட் – 19 தொற்றுக்கு இலக்காகி மரணித்தவர்கள் உள்ளடங்களாக மொத்தமாக 221,276 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களில் , 123,779 பேர் புத்தாண்டின் பின்னர் அறியப்பட்டவர்களாவர்.

நேற்று (13) காலை வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெற்றுவந்த 2,426 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறினர். கடந்த 24 மணி நேரத்தில் எந்த மரணமும் ஏற்படவில்லை. ஆனால் மே 23 முதல் மே 31 வரை 12 மரணங்களும், ஜூன் 1 முதல் ஜூன் 11 வரை 51 மரணங்கள் பதிவாகியுள்ளன.

நேற்று (13) வரையில் (24 மணி நேரத்தில்) ஹோட்டல் மற்றும் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 64 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 6,416 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று (13) காலை வரையான காலப்பகுதியில் 20 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைபடுத்தப்பட்டிருந்த 494 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பினர்.

நேற்று (13) நிலவரப்படி முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 8 பொலிஸ் பிரிவுகள் மற்றும் 258 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைபடுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. குருநாகல் மாவட்டத்தில் உள்ள பன்னல பொலிஸ் பிரிவுடனான 93 கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


Recommended For You

About the Author: ஈழவன்