மெண்டிஸ்- மெத்தியூஸ் அரைச்சதம்- சரிவிலிருந்து மீண்டது இலங்கை!!

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதற்கமைய இன்றைய ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்ட நேரமுடிவில் நிரோஷன் டிக்வெல்ல 39 ஓட்டங்களுடனும், சுரங்க லக்மால் 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர். அத்தோடு இலங்கை அணி, நியூஸிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், 22 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

இரு அணிகளினதும் சர்வதேச டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதல் தொடராக அமைந்த இத்தொடரின் முதல் போட்டி, நேற்று காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமானது.

எதிர்பார்ப்பு நிறைந்த இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. மழையின் மந்தமான போக்குடன் ஆரம்பத்த இப்போட்டியில், நியூஸிலாந்து அணி, ஆரம்ப விக்கெட்டுக்காக 64 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டொம் லதம் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் கேன் வில்லியம்சன், ஓட்டமெதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பிறகு களமிறங்கிய அனுபவ வீரர் ரோஸ் டெய்லர் களத்தில் நங்கூரமிட, மற்றொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜீட் ராவலும் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனையடுத்து ககளமிறங்கிய ஹென்ரி நிக்கோல்ஸ், ரோஸ் டெய்லருடன் இணைந்து அணிக்காக சிறப்பான இணைப்பாட்டத்தை பெற்றுக்கொடுத்தார். இருவரும் இணைந்து 100 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த வேளை, ஹென்ரி நிக்கோல்ஸ் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன்பிறகு களமிறங்கிய டொம் பிளென்டலும் ஒரு ஓட்டத்துடன் ஏமாற்றினார். போட்டியின் 68ஆவது ஓவரில் ரோஸ் டெய்லர் 86 ஓட்டங்களுடனும், மிட்செல் சான்ட்னர் 8 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருக்க மழைக் குறுக்கிட்டது. இதனால் போட்டி இடை நிறுத்தப்பட்டது. இதன்போது இலங்கை அணி சார்பில், அகில தனன்ஜய 57 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இது அவரது 4ஆவது 5 விக்கெட்டுகள் பிரதியாகும்.

இதனைத் தொடர்ந்து இன்று போட்டியின் இரண்டாவது நாளை தொடர்ந்த நியூஸிலாந்து அணி, 15.2 ஓவர்களை எதிர்கொண்டிருந்த போது, மீதமுள்ள ஐந்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதற்கமைய நியூஸிலாந்து அணி, 83.2 ஓவர்கள் நிறைவில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இன்றைய நாளில் வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் 29 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து4 விக்கெட்டுகளை அள்ளினார். நியூஸிலாந்து அணி சார்பில், ரோஸ் டெய்லர் 86 ஓட்டங்களையும், மிட்செல் சான்ட்னர் 13 ஓட்டங்களையும், டிம் சவுத்தீ 14 ஓட்டங்களையும், ட்ரென்ட் போல்ட் 18 ஓட்டங்களையும், அஜாஸ் பட்டேல் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழந்தனர். சோமர்வில்லே ஆட்டமிழக்காது 9 ஓட்டங்களுடன் இறுதிவரை களத்தில் இருந்தார்.

இதனைதொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, இன்றைய ஆட்ட நேர முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்போது இலங்கை அணி சார்பில், திமுத் கருணாரத்ன 39 ஓட்டங்களுடனும், லஹிரு திரிமன்னே 10 ஓட்டங்களுடனும், குசல் மெண்டிஸ் 53 ஓட்டங்களுடனும், அஞ்சலோ மெத்தியூஸ் 50 ஓட்டங்களுடனும், ஆட்டமிழந்தனர்.

மேலும், குசல் பெரேரா 1 ஓட்டத்துடனும், தனஞ்சய டி சில்வா 1 ஓட்டத்துடனும், அகில தனஞ்சய ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழந்தனர்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில், அஜாஸ் பட்டேல் 5 விக்கெட்டுகளையும், ட்ரென்ட் போல்ட் மற்றும் சோமர் வில்லே ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இன்னமும் 3 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், நாளை இலங்கை அணி போட்டியின் மூன்றாவது நாளை தொடங்கவுள்ளது.


Recommended For You

About the Author: Editor