கூட்டணியில் ‘பிஸ்தா’

மெட்ரோ சிரிஷ் கதாநாயகனாக நடிக்கும் பிஸ்தா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுவருகிறது.

1997ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கார்த்திக், நக்மா இணைந்து நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் பிஸ்தா.

மௌலி, மணிவண்ணன் காமெடியில் கலக்கியிருந்த அப்படத்தின் பெயரிலேயே ரமேஷ் பாரதி இயக்கத்தில் புதிய படம் தயாராகிவருகிறது.

ஒருவேளை அந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகுமோ என பேசப்பட்ட நிலையில் காமெடியான திரைக்கதை என்பதைக் கடந்து அப்படத்திற்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

மெட்ரோ சிரிஷ் கதாநாயகனாக நடிக்க மிருதுளா முரளி, அருந்ததி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பின் சமீபகாலமாக நகைச்சுவை நடிகர் செந்தில் அவ்வப்போது சில படங்களில் நடித்துவருகிறார்.

அந்தவகையில் இந்தப் படத்தில் யோகி பாபு, சதிஷ் ஆகியோருடன் இணைந்து காமெடி செய்கிறார்.

தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் மணப்பெண், மணமகன் ஆகியோரை சிரிஷ், யோகி பாபு, சதிஷ், செந்தில் ஆகியோர் கடத்துவதாக காட்டப்பட்டுள்ளது. மணப்பெண்ணாக அருந்ததி நடிக்க மணமகனாக நமோ நாராயணா நடித்துள்ளார்.

கும்பகோணத்தை கதைக்களமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. தற்போது இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவருகிறது. தரண் இசையமைக்கும் 25ஆவது படம் இதுவாகும்.


Recommended For You

About the Author: Editor