ஆ.ராசா, கனிமொழிக்கு நோட்டீஸ்!

2ஜி மேல்முறையீட்டு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி. சைனி கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி அறிவித்தார். இந்த தீர்ப்புக்கு எதிராக அமலாக்கத் துறை சார்பிலும், சிபிஐ சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஒருவருடமாக இவ்வழக்கு விசாரணையில் இருந்துவருகிறது. கடந்த முறை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென சிபிஐ சார்பாக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கு இன்று (மே 31) நீதிபதி ஏ.கே.சாவ்லா முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். ஆனாலும், சிபிஐ தரப்பில் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, விசாரணையை ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இவ்வழக்கில் ஏன் அவசரம் என்று நீதிபதி கேள்வி எழுப்ப, அதற்கு சிபிஐ தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

மேலும், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.


Recommended For You

About the Author: Editor