நோட்ரே டாம் தேவாலயம் இடிந்து விழும் அபாயம்!

பரிஸில் கடந்த ஏப்ரல் மாதம் தீ விபத்துக்குள்ளான 850 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நோட்ரே டாம் தேவாலயம் முற்றிலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் கலாசாரத் துறை அமைச்சகத்தினால் நேற்று(புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘தீவிபத்துக்குப் பிறகு, அண்மையில் வீசிய அனல் காற்று காரணமாக நோட்ரே டாம் தேவாலயத்தின் மேலும் சில கல்கள் விழுந்துவிட்டன.

இதன் காரணமாக, அந்த தேவாலயம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அங்கு சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிஸில் அமைந்துள்ள, புகழ்பெற்ற நோட்ரே டாம் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தபோது திடீரென தீப்பிடித்தது.

இதன்காரணமாக, 12-ஆவது நூற்றாண்டில் மரச் சட்டங்களை பெருமளவில் பயன்படுத்திக் கட்டப்பட்ட அந்த தேவாலய மேற்கூரையின் பெரும் பகுதி எரிந்து நாசமானது.

மேலும், அந்தத் தேவாலயத்துக்கு கம்பீரத்தை அளித்து வந்த புகழ்பெற்ற கூம்பு வடிவ கோபுரம் இடிந்து விழுந்தது.

அத்துடன், தேவாலயத்தின் உள்பகுதி, மேற்சுவர், ஜன்னல்கள் மற்றும் ஏராளமான கலைப் படைப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் சேதமடைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor