
இரவு நேரத்தில் வீடு ஒன்றுக்குள் புகுந்து அங்கிருந்த பெண் ஒருவரின் உதட்டை கடித்து காயப்படுத்தியதாகக் கூறப்படும் நபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.எல்.ஏ.றஸீட் உத்தரவிட்டார்.
நேற்று (14) புதன்கிழமை பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே மேற்படி உத்தரவைப்பிறப்பித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான பெண் தனது கணவர் வெளிநாடு ஒன்றுக்குத் தொழில் நிமித்தம் சென்றிருந்த நிலையில், தனது பெண் பிள்ளையுடன் கடந்த 11 ஆம் திகதி இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் போது நள்ளிரவு வேளையில் வீட்டின் கூரையை பிரித்து படுக்கையறைக்குள் இறங்கிய இருவரில் ஒருவர் பெண்ணின் கால்களை பிடிக்க மற்றவர் பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் புரிய முற்பட்ட சமயம் பெண்ணின் வாயைக் கடித்துள்ளார்.
இதன்போது பாதிக்கப்பட்ட பெண் கூக்குரலிட்டதனையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் உறவினர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இச்சம்பவம் தொடர்பாக குறித் பெண்ணின் தாய் அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து கடந்த செவ்வாய்கிழமை (13) இரவு ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.