படைவீரர்கள் தற்கொலை செய்தால் எவ்வித கொடுப்பனவும் இல்லை!!

தற்கொலை செய்து கொள்ளும் படைவீரர்களது குடும்பங்களுக்கு எவ்வித கொடுப்பனவும் வழங்கப்பட மாட்டாது என இராணுவம் அறிவித்துள்ளது.

இராணுவப் படை உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கி வரும் படைப் பிரிவுகளில் கடமையாற்றி வரும் படைவீரர்கள் தற்கொலை செய்து கொண்டால் அவர்களில் தங்கி வாழ்வோர் அல்லது அவர்களது குடும்பங்களுக்கு நலன் திட்டங்கள் வழங்கப்படாது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து அறிவித்துள்ளார்.

படைவீரர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் அது குறித்து அதிகாரிகளிடம் பேசி தீர்வு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

பிரச்சினை குறித்து ஆராய்ந்ததன் பின்னர் சேவையிலிருந்து விலகிச் செல்லவோ அல்லது வேறு ஓர் இடத்திற்கு மாற்றம் பெற்றுச் செல்லவோ முடியும் என அவர் குறிபபிட்டுள்ளார்.

அவசர நேரங்களில் படைவீரர்கள் விடுமுறை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் உண்டு எனவும், அவ்வாறு விடுமுறை பெற்றுக் கொள்ளாது தற்கொலை செய்து கொள்வது பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோட்டை இராணுவ தலைமையகத்தில் நேற்று தற்கொலை செய்து கொண்ட படைவீரர் சேவையில் இணைந்து கொண்டு மூன்றாண்டுகளும் பத்து மாதங்களுமே கடந்துள்ளதாகவும் இதனால் அவரில் தங்கி வாழ்வோருக்கு அரசாங்கம் எவ்வித உதவிகளையும் வழங்காது என அவர் தெரிவித்துள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான சேவைக்காலம் என்பதனால் அவரது குடும்பத்திற்கு மரண நலன் கொடுப்பனவு வழங்கப்படாது எனவும், தற்கொலை செய்து கொள்வதால் பெற்றோருக்கு எதுவித நலன்களும் கிடைக்க போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கி வரும் படைப்பிரிவுகளில் கடமையாற்றுவோரின் மரணத்தின் போது 55 வயது வரை சம்பளமும், அதன் பின்னர் ஓய்வூதியமும், மரண கொடுப்பனவும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor