தாய்வீடு செல்லும் ஓவியா!!

ஓவியா மீண்டும் மலையாளத் திரையுலகம் பக்கம் கவனத்தைத் திருப்பியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த ஓவியா, மலையாளத் திரையுலகில்தான் அறிமுகமானார்.

அங்கு அவர் மூன்று படங்கள் நடித்தபின்தான் தமிழில் நாளை நமதே என்ற படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.

விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன்பின் சில திரைப்படங்களில் நடித்துக் கவனம்பெற்ற ஓவியாவைத் தமிழ்நாட்டு மக்கள் முழுவதும் கொண்டாடித் தீர்த்தது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம்தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா அளவுக்குப் பிரபலமானது யாரும் இல்லை என்று சொல்லலாம்.

ஆனால், அதில் கிடைத்த அறிமுகத்தைக்கொண்டு பலரும் திரைத் துறை வாய்ப்புகளைப் பெற்ற நிலையில், தனக்கு வந்த வாய்ப்புகளையும் ஏற்க மறுத்தார் ஓவியா.

வாய்ப்புகள் வருகின்றன என்பதற்காகப் படங்களில் நடிப்பதைவிட மனதுக்குப் பிடித்தால் மட்டுமே ஒப்புக்கொள்வேன் எனக் கறாராக இருந்தார்.

இடையில் கன்னடம், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்துவந்த ஓவியா 2011ஆம் ஆண்டுக்குப் பின் மலையாளத்தில் ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை.

தற்போது ஒன்பது ஆண்டுகள் கழித்து மலையாளப் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

“எனக்கு இது அறிமுகப்படம் போல உள்ளது. இங்கு யாருக்கும் என்னைத் தெரியாது” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பாபுராஜ் இயக்கும் பிளாக் காபி படத்தில் இணைந்துள்ள இவர், படம் பற்றி கூறும் போது, “இது ஒரு காதல் கதை. இதில் நான் ஒரு விளம்பர மாடலாக நடிக்கிறேன்.

எனது கதாபாத்திரம் தனது துறையில் முத்திரை பதிக்க மேற்கொள்ளும் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

அதன் உறவுச் சிக்கல்கள் குறித்தும் படம் பேசும்” என்று கூறியுள்ளார்.

“மலையாளத் திரைப்படத்தில் நடிப்பதாக எனக்கு எந்தத் திட்டமும் இல்லை.

பாபுராஜ்தான் என்னை நடிக்கச் சொல்லி தூண்டினார்.

அவரை எனக்கு நீண்ட நாள்களாகத் தெரியும். மேலும், நல்ல கதை என்பதால் இந்தப் படத்தில் நடிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor