தமிழ் சேம்பர் உருவாக்க வேண்டும்-பாரதிராஜா!!

தமிழ் சேம்பர் ஒன்று உருவாக்கி, சிறந்த படங்களை நாம் தேர்ந்தெடுத்து தேசிய விருதுக்கு அனுப்ப வேண்டும் என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ், மஹிமா நம்பியார் இணைந்து நடித்துள்ள ஐங்கரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 14) சென்னையில் நடைபெற்றது.

விழாவில் படக்குழுவினரோடு இயக்குநர் பாரதிராஜாவும் கலந்துகொண்டு பேசினார்.

“தரமான இயக்குநர்கள் அதிகமாக வந்திருக்கிறார்கள் இன்றைய காலத்தில். தரமான படங்கள் அதிகமாக வந்திருக்கின்றன இந்த தலைமுறையில்.

ஆனால், ஒரு விருதுகூட தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு வழங்கப்படவில்லை என்பது வேதனையாக உள்ளது.

வசந்தபாலன் இதுபற்றி வருத்தம் தெரிவித்தார். அது நியாயமான வேதனை. அவர் ஒரு க்ளாஸ் பிலிம் மேக்கர்” என்றார்.

“நானும் ஜூரியாக இருந்து ஏழு படங்களுக்குச் சண்டை போட்டுதான் விருது வாங்கிக்கொடுத்தேன். முதலில் இங்கிருந்து அனுப்புபவர்கள் சரியாக இருக்க வேண்டும்.

இதற்கெல்லாம் ஒரு காரணம் இங்கு ‘தமிழ் சேம்பர்’ உருவாக்கப்பட வேண்டும். இதை நான் பல ஆண்டுகளாகக் கூறிவருகிறேன்.

இங்கு நல்ல தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். நல்ல விநியோகஸ்தர்களைத் தேடத்தான் வேண்டியுள்ளது” என்று பேசினார்.

சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது ‘பாரம்’ என்ற சுயாதீனத் திரைப்படத்துக்குக் கிடைத்துள்ளது. பிரியா கிருஷ்ணசாமி என்பவர் இயக்கியுள்ளார்.

நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய பாரதிராஜா, “தெலுங்கு சினிமா நான்கு விருதுகளைப் பெற்றுள்ளது, மலையாளம் ஐந்து விருதுகளைப் பெற்றுள்ளது. கன்னடம் ஏழு விருதுகளைப் பெற்றுள்ளது.

தமிழுக்கு ஒன்றுகூட இல்லை. பேரன்பு, வடசென்னை, மேற்குத்தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள் என எவ்வளவோ நல்ல படங்கள் இந்த ஆண்டு வந்துள்ளன.

ஆனால், பெயர் தெரியாத ஒரு படத்துக்கு விருது வழங்கியிருக்கிறார்கள்” என்றார்.

தேசிய விருதுக் குழுவினர் தமிழை ஒதுக்குகின்றனர் என்ற பாரதிராஜா பேச்சுக்கு சமூக வலைதளங்களில் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் பாரம் திரைப்படம் குறித்து அவர் பேசியது விமர்சனங்களையும் சந்தித்துள்ளது.

படத்தைப் பார்க்காமல், எப்படி அது நல்ல படம் இல்லை அல்லது விருதுக்குத் தகுதியான படம் இல்லை என்ற முடிவுக்கு வர முடியும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.


Recommended For You

About the Author: Editor