
எந்தவொரு எதிரியையும் எதிர்கொள்ளும் சக்தி இராணுவத்திற்கு இருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக கைது சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.
கண்டியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவார்கள். சந்தேக நபர்கள் எவராக இருந்தாலும் கைதுகள் தொடரும்.
உலகில் எந்த நாடும் 100% பாதுகாப்பை உறுதி செய்யவில்லை. பயங்கரவாத குழுக்கள் சர்வதேச இணைப்புகள் மூலம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. அதன்படி பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான செயல்முறை தொடரும்.
தற்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்தவும் பாதுகாப்பை வழங்கவும் அதிகபட்ச சக்தியை இராணுவம் பயன்படுத்தும். நாட்டினதும் நாட்டு மக்களது பாதுக்காப்பை பேண இராணுவம் உறுதிபூண்டுள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அமைப்பின் பின்னணி குறித்த புலனாய்வுத்துறை தேடுதல்களை முன்னெடுத்து வருகிறது. எனவே தேசிய பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் எந்த அச்சம்கொள்ளத் தேவையில்லை.
இதேவேளை எதிர்காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய எதிரி தொடர்பாக நன்கு அறிந்து அதனை எதிர்கொள்ள தேவையான சக்தியை இராணுவத்திற்குள் உருவாக்க முயற்சிக்கின்றோம்
அத்தோடு எந்தவொரு அரசியல் பிரிவினரோ அல்லது வெளிநாட்டுக் குழுவின் தேவைகளுக்கு ஏற்ப இராணுவம் இயங்காது” என்றும் அவர் கூறினார்.