ஈஸ்டர் தாக்குதல்; கைது செய்யப்பட்ட உளவுத்துறை அதிகாரியின் தகவல்கள் மறைக்கப்பட்டது ஏன் ?

ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய உளவுத்துறை அதிகாரி ஒருவரை ஷானி அபேசேகர கைது செய்து விசாரித்திருந்தபோதும் அவை தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் ஏன் சேர்க்கப்படவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய போதே கேள்வி எழுப்பினார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

உளவுத்துறை அதிகாரி மற்றும் ஈஸ்டர் தாக்குதல் நடத்தியவர்களுக்கு இடையிலான தொடர்புகளை ஐபி முகவரி மூலம் குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கண்டுபிடித்தார். உளவுத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யால் விசாரிக்கப்பட இருந்த நேரத்தில் அந்த அதிகாரியை அவர்களின் காவலுக்கு மாற்றுமாறு இராணுவ புலனாய்வு பிரிவு உத்தரவிட்டுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு நடத்திய விசாரணையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்ட போதும் அவை ஆணைக்குழுவின் அறிக்கையில் இணைக்கப்படவில்லை.

மேலும் குறித்த தாக்குதலுடன் தொடர்பான விசாரணையில் ஈடுபட்ட சி.ஐ.டி. அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்றும் அதே நேரத்தில் அபேசேகரவும் இடமாற்றம் செய்யப்பட்டு பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார் என தெரிவித்தார்.

அதன்போது நாடாளுமன்றில் கடும் வாய்தர்க்கம் இடம்பெற்றதுடன், ஹரின் பெர்னாண்டோ, நாடாளுமன்றையும் பொதுமக்களையும் தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக அரசாங்க தரப்பு உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.

இருப்பினும், தான் ஆதாரங்களுடனும் பேசுவதாக தெரிவித்த ஹரின் பெர்னாண்டோ, 2019 ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த உண்மை விரைவில் மக்களுக்கு தெரியவரும் என குறிப்பிட்டார்.


Recommended For You

About the Author: ஈழவன்