மயிலிட்டி துறைமுகத்தை ரணில் திறந்து வைத்தார்.

யாழ்ப்பாணம் மைலிட்டி துறைமுகத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க திறந்துவைத்துள்ளார்.

மிக நீண்டகாலத்தின் பின்னர் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள இந்த துறைமுகம் இன்று (வியாழக்கிழமை) காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 வருடங்கள் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டிருந்த மைலிட்டி துறைமுகம் விடுவிக்கப்படாது என இராணுவம் உறுதியாக கூறியிருந்த நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டதுடன் மக்களின் நீண்டகால கோரிக்கையான துறைமுக அபிவிருத்தி தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், சுமார் 150 மில்லியன் ரூபாய் செலவில் மயிலிட்டி துறைமுகத்தின் புனரமைப்பு பணிகள், 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்த புனரமைப்பு பணிகளின் முதல் கட்டம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், மீன்பிடி வலை தயாரிக்கும் நிலையம், சனசமூக நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியற்றை திறந்து வைத்த பிரதமர், துறைமுக புனரமைப்பு நினைவு கல்லினையும்  திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன், மாவை சேனாதிராஜா மற்றும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர், பிரதமரின் செயலாளர் சிவஞானசோதி, மாநகர ஆணையாளர்,யாழ்ப்பாண பிரதேச செயலாளர் மற்றும் அரச அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

 


Recommended For You

About the Author: ஈழவன்