இரண்டு வயது குழந்தைக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தகவல்!

நாட்டில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக BBC சிங்கள செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரமுகர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி வழங்கும் நிலையத்தில், அரசியல்வாதிகளின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும்  பிரமுகர்கள் என பலரும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பிரமுகர்களுக்கான தடுப்பூசி வழங்கும் நிலையத்தில் பணியாற்றும் சுகாதார ஊழியர் ஒருவரின் தகவலை அடிப்படையாக கொண்டு இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், நாட்டில் வயதானவர்கள் மற்றும் கொரோனா தொற்று பரவக்கூடிய ஆபத்து நிறைந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசிகள் வழங்கப்படாத நிலையில், இவ்வாறு பிரமுகர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவின் உதவித் திட்டங்களுக்கு அமைவாக இலவசமாக நாட்டுக்கு கொவிஸீல்ட் தடுப்பூசி கொண்டுவரப்பட்டது.

இதனைத் அடுத்து கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்கு முன்னின்று செயற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படும் எனவும், அதற்கு அடுத்ததாக 30 முதல் 60 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு சுகாதார அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில், நாரேஹேன்பிட்ட பகுதியில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

இதன்போது, தடுப்பூசிகளை வழங்குவதில் முறையான நடைமுறைகள் செயற்படுத்தப்படவில்லை என குறிப்பிட்டு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

மேலும், கொழும்பு புறக்கோட்டைக்கு மரக்கறி கொள்வனவு செய்ய சென்ற ஒருவர், நாரேஹேன்பிட்ட பகுதியில் தடுப்பூசி செலுத்தப்படுவதை அவதானித்ததாகவும், அதனைத் தொடர்ந்து தானும் வரிசையில் நின்று தடுப்பூசியை பெற்றுக்கொண்டதாகவும் BBC சிங்கள செய்தி சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, நாட்டில் முறையான நடைமுறையொன்று இல்லாது வயதினை மாத்திரம் அடிப்படையாக கொண்டு தடுப்பூசி வழங்கப்பட்டு வருவதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கிரிபத்கொட பகுதியில் இரண்டு வயது குழந்தைக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கிரிபத்கொட பகுதியை சேர்ந்த 28 வயதுடைய பெண்ணொருவர் BBC சிங்கள செய்தி சேவைக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

தனக்கு தெரிந்த ஒருவரின் ஊடாக தான் தடுப்பூசியை பெற்றுக்கொண்டதுடன், தனது இரண்டு வயது குழந்தைக்கும் தடுப்பூசியை செலுத்திக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ரீதியில் 18 வயதுக்கு கீழ்ப்பட்ட எந்தவொரு சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பதுடன், உலக சுகாதார ஸ்தாபனம் அது தொடர்பில் தெளிவுபடுத்தல்களையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கொவிஸீல்ட் தடுப்பூசியானது பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும் போது 18 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படகூடாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், இலங்கையில் ஒரு நடைமுறை திட்டம் இன்றியே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக BC சிங்கள செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்