யாழ்ப்பாண சிறைக்கைதி உள்ளிட்ட மூவருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் ஊர்காவற்றுறையில் கடற்தொழிலாளி ஒருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 255 பேரின் மாதிரிகள் இன்று பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் எவருக்கும் தொற்று இல்லை என அறிக்கையிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 126 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து கடந்த வாரம் விடுவிக்கப்பட்டு காரைநகரில் உள்ள வீடு திரும்பிய ஒருவர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மெலிஞ்சிமுனையைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர் பூநகரி வலைப்பாடு பகுதியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் பங்குபற்றிவிட்டு வந்துள்ளார். அவர் அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்


Recommended For You

About the Author: ஈழவன்