தேர்தல் பொதுக் கூட்டங்களால் கொரோனா பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது!

தேர்தல் பொதுக் கூட்டங்களால் கொரோனா பரவ வாய்ப்பு அதிகமாக இருப்பதால் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என தேர்தல் திணைக்களத்திடம்  சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், “தமிழகத்தில் சமூக இடைவெளி முகக்கவசம் அணிவதில் மக்கள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர்.

பொதுக் கூட்டங்களிலும் இதே நிலை நீடிக்கும் என தெரிகிறது. எனவே சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரங்களை கண்காணிக்கும் வகையில் கொரோனா தடுப்பு கண்காணிப்பு குழு அமைக்க தேர்தல் திணைக்களத்திடம் தெரிவித்துள்ளோம்.

மேலும் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் வலியுறுத்தி உள்ளோம். இதுகுறித்து தேர்தல் திணைக்களம் முறையான வழிகாட்டுதலை  வழங்கும் என எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. சில வாரங்களாக சென்னை, செங்கல்பட்டு,  திருவள்ளூர்,  கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சிகள் நடத்தும் கூட்டங்களால் கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சல் ஆகியவை அதிவேகமாக பரவும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் சமூக இடைவெளி முகக்கவசம் போன்றவை கேள்விக்குறியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்