ஐக்கிய தேசியக் கட்சி பிரிவதற்கு ரவூப் ஹக்கீம்தான் காரணம்

ரவூப் ஹக்கீம் தான் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து குழு பிரிந்து செல்வதற்கு முழுமையாகச் செயற்பட்ட ஒருவர். எனவே எம்முடன் இணைந்திருந்த சிறுபான்மைக் கட்சிகளில் இருந்து நாம் பலவற்றைக் கற்றுக் கொண்டோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஆசு மாரசிங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாக மாவட்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”கடந்த காலங்களில் எமது கட்சி தொடர்பில் நாங்கள் தேர்தல்களுக்கு முகங்கொடுக்கையில் எம்முடன் இணைந்துள்ள கூட்டுக்கட்சிகளின் செயற்பாடுகளினால் எமது கட்சியின் செயற்பாடுகள் மழுங்கடிப்புச் செய்யப்பட்டது.

எம்முடன் இணைந்திருந்த கட்சிகளின் செயற்பாடுகள் தொடர்பில் நாங்கள் நன்கு அறிவோம். உதாரணமாகச் சொல்லப் போனால் ரவூப் ஹக்கீம் தான் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து குழு பிரிந்து செல்வதற்கு முழுமையாகச் செயற்பட்ட ஒருவர். எனவே எம்முடன் இணைந்திருந்த சிறுபான்மைக் கட்சிகளில் இருந்து நாம் பலவற்றைக் கற்றுக் கொண்டோம்.

எமது பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் எமது கட்சிக்குள்ளேயே முஸ்லீம், தமிழ் அமைப்புகளை உருவாக்கவுள்ளோம். எனவே கட்சியினுள்ளே சிங்கள, தமிழ், முஸ்லீம் என ஒவ்வொரு தரப்பிலும் தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும். மூவினங்களையும் ஒன்றுபடுத்தியே ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

கட்சியில் புதிய உறுப்பினர்களை இணைத்து கட்சியை மறுசீரமைப்பது என்பது மிக முக்கியமானதாக இருக்கின்றது. அனைவரும் ஒன்றிணைந்து இதனைச் சீரமைக்க வேண்டும். எனவே எமது கட்சிக்குத் தற்போது சிறந்ததொரு தலைவர் உருவாக்கப்பட்டுள்ளார்.

செயற்பாட்டு ரீதியில் அவரே கட்சியின் அடுத்த தலைவர். அது உறுதியானது. எனவே அவருடன் இணைந்து எமது கட்சியைப் பலப்படுத்தவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தெரிவித்தார்


Recommended For You

About the Author: ஈழவன்