7 பேர் கொலை வழக்கு: தாயாரின் மரண தண்டனையை குறைக்க மகன் வேண்டுகோள்!

சொந்த குடும்பத்தினர் 7 பேரை கொன்ற வழக்கில், தாயாரின் மரண தண்டனையை குறைக்கும்படி மகன், ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தரபிரதேசத்தின் அம்ரோகா நகரை சேர்ந்தவர் ஷப்னம். இவரது காதலர் சலீம். இந்நிலையில் தன்னுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காதலர் சலீமுடன் சேர்ந்து தனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேருக்கு மயக்க மருந்து கொடுத்து பின்னர் அவர்கள் அனைவரையும் ஷப்னம் கொலை செய்தார்.

குறித்த சம்பம் தொடர்பான வழக்கு விசாரணையில் ஷப்னம், சலீம் இருவருக்கும் மாவட்ட நீதிமன்றம், தூக்கு தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ஆம் ஆண்டும்,  உச்ச நீதிமன்றம் 2015ஆம் ஆண்டும் உறுதி செய்தன.

இந்நிலையில் ஷப்னம், ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு  மதுராவிலுள்ள சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது.

ஆனாலும் அவரது தூக்கு தண்டனைக்கான நாள் மற்றும் நேரம் பற்றி அம்ரோகா நீதிமன்றம் விபரங்களை இதுவரை வெளியிடவில்லை. இந்தியாவில் சுதந்திரத்துக்கு பிறகு முதல் முறையாக ஒரு பெண் தூக்கிலடப்பட உள்ளார்.

இந்நிலையில் ஷப்னமின் மகன் முகமது தாஜ், தனது தாயாரின் மரண தண்டனையை குறைக்கும்படி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் குறித்து ஊடகங்களில் கூறியுள்ளதாவது, “எனது தாயாரை நான் நேசிக்கிறேன். ஜனாதிபதிக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். அவரது மரண தண்டனை குறைக்கப்பட வேண்டும். எனது தாயாருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும். ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது என்பது அவரது முடிவு. ஆனால் எனக்கு நம்பிக்கை உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்