அழுக்குநீரை பருகும் அவல நிலையில் மக்கள்!!

மட்டக்களப்பு, வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பால்ச்சேனை நாகபுரம் கிராம மக்கள் குடிநீர் இன்றி பாரிய சிரமத்தினை எதிர்நோக்கி வருவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

பால்ச்சேனை நாகபுரம் கிராமத்தில் சுமார் நூற்று நாற்பதுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக குடிநீர் இன்றி அல்லலுறுகின்றனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவிக்கையில்,

பெரும்பாலும் சித்திரை மாதம் தொடக்கம் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதிகளில் கிணற்றில் நீர் குறைந்து காணப்படும்.

தற்போது கிணற்றில் முற்றுமுழுதாக நீர் இல்லாமல் கிணறு காணப்படுகின்றது.

சிலரது வீட்டு கிணற்றில் ஓரளவு நீர் காணப்படுகின்றது. அதில் குளிப்பதற்கு நீர் எடுத்தால், குடிப்பதற்கு, உடைகளை கழுவுவதற்கு நீர் இல்லாத நிலைமை காணப்படுகின்றது.

இதனால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டி உள்ளது.

எமது பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வதற்கு பிள்ளைகளுடைய சீருடைகளை கழுவுவதற்கு நீர் இல்லாமல் கஸ்டப்படுகின்றோம்.

கிணற்றில் நீரை வடித்து எடுத்தாலும் அதனுடன் மண் மற்றும் தெறி புழுக்கள் வருகின்றது.

குறித்த நீர் மூலம் உடைகளை கழுவினால் உடைகள் காவி நிறமாக மாறும் நிலை உள்ளது.

மண்கள் மற்றும் தெறி புழுக்கள் காணப்படும் நீரை பருகுவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றது. சிலருக்கு நீர் ஒவ்வாமை காரணமாக பல நோய் தாக்கத்திற்கு உள்ளாகி மீள முடியாத நிலையில் காணப்படுகின்றது.

தற்போது வாகரைப் பிரதேசத்தில் வெள்ளரிக்காய் செய்கை செய்யப்பட்டு வரும் நிலையில் அதற்கு நீர் பாய்ச்சுவதற்கு நிலத்தில் இருந்து இருபது அடி ஆழத்தில் நீர் பம்பி மூலம் நீர் பெறுவதால் கிராமத்திலுள்ள கிணறுகளில் நீர் வற்றும் நிலைமையும் காணப்படுவதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்தோடு வாகரை பிரதேச சபையினால் நீர் தாங்கிகள் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவை மீள கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதுவரை எமது கிராமத்தில் மீள நீர் தாங்கிகள் வைக்கப்படவில்லை.

வாகரை பிரதேச சபையினால் நீர் தாங்கிகள் வைக்கப்பட்டு கிழமைகளில் மூன்று நாட்களாவது தண்ணீர் வழங்கினால் எமது கிராமத்தில் உள்ள மக்கள் ஓரளவேணும் நன்மை பெறக் கூடியதாக நிலைமை காணப்படும்.

எனவே சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு குடி நீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க தயவு செய்து முன்வருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor