பாகிஸ்தானின் 73 வது சுதந்திர தினம்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் இந்தியாவுக்கு எதிராக சமூக ஊடகப் போர் செய்ய பாகிஸ்தான் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்லாமாபாத்தில் உள்ள ஜின்னா கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெற்ற ஒரு கொடியேற்றும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பாகிஸ்தான் ஜனாதிபதி டொக்டர் ஆரிஃப் ஆல்வி உரையாற்றினார்.

பாகிஸ்தான் அமைதி நேசிக்கும் நாடு, காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மற்றும் உரையாடல் மூலம் தீர்க்க விரும்புகிறது. எவ்வாறாயினும், நமது அமைதி கொள்கையை இந்தியா நமது பலவீனம் என்று தவறாக புரிந்து கொள்ளக்கூடாது.

நாங்கள் போரை விரும்பவில்லை, ஆனால் போர் நம்மீது சுமத்தப்பட்டால் நாங்கள் முழுமையாக தற்காத்துக் கொள்வோம். போர் இரு நாடுகளுக்கு இடையில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்தாது, மாறாக அதன் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்படும். இந்தியா நியாயமானதாக இருக்க வேண்டும் என்று ஆரிஃப் ஆல்வி வலியுறுத்தினார்.

காஷ்மீரிகளுக்கு எதிராக இந்தியா செய்த கொடூரமான குற்றங்களை அம்பலப்படுத்த சமூக ஊடகங்களை முழுமையாக பயன்படுத்துமாறு ஜனாதிபதி நாட்டு மக்களிடையே கேட்டுக்கொண்டார்.

மேலும், பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டமன்றத்தில் இன்று உரையாட உள்ள பாகிஸ்தான் பிரதமர், அங்கு பாகிஸ்தான் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடுவார் என ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் பாகிஸ்தானின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை வாழ் பாகிஸ்தானிய உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.


Recommended For You

About the Author: ஈழவன்