செஞ்சோலை நினைவேந்தல்

2006ஆம் ஆண்டு விமானக் குண்டுத் தாக்குதலில் 61 மாணவிகள் படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு முல்லைத்தீவில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்நிகழ்வில் உயிரிழந்த மாணவிகளின் உறவினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவமோகன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, பிரதான சுடரினை செஞ்சோலை படுகொலையில் இரண்டு பிள்ளைகளை இழந்த தந்தை ஏற்றிவைத்ததுடன் பிள்ளைகளின் உருவப் படங்களுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்களால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடர் ஏற்றிவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களினால் நினைவு வளைவு திறந்துவைக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த நினைவுத் தூபி அமைக்கும் வேலைகளை மேற்கொண்டு வந்தவர்களை புதுக்குடியிருப்பு பொலிஸார் அழைத்து விசாரணைகளை மேற்கொண்டதோடு குறித்த இடத்தில் ஒளிப்படங்களைப் பதிக்கவோ, அவர்களுடைய பெயர்களை எழுதவோ தடை விதித்தனர்.

இந்நிலையில் நினைவுத் தூபியில் நிரந்தரமாக மாணவர்களுடைய புகைப்படங்களைப் பதிக்க முடியாவிட்டாலும் மாணவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு செஞ்சோலை வளாக வீதி என எழுதப்பட்ட குறித்த வளைவு திறந்துவைக்கப்பட்டது.

 


Recommended For You

About the Author: ஈழவன்