ஐ. நா. பேரவையில் இலங்கை மீதான தீர்மானம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை மீது ஒன்றுக்கு மேற்பட்ட தீர்மானங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றுவதா இல்லை ஒரே தீர்மானமாக நிறைவேற்றுவதா என்பது தொடர்பாக உறுப்பு நாடுகளுடன் விரைவில் கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் இலங்கை மீது எத்தகைய தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது என்பது தொடர்பாக தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு தமிழ்த் தப்பில் இருந்து பொது ஆவணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த ஆவணத்தினை பெற்றுக்கொண்டதை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் உறுதி செய்துள்ளன. அத்துடன் சில நாடுகள் அடுத்தகட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைக்கள் தொடர்பில் என்னுடன் கலந்துரையடியிருக்கின்றன.

இந்நிலையில் நாம் இலங்கையின் பொறுப்புக்கூறலை ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து மீளெடுத்து ஐ.நா.செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் கோரியிருக்கின்றோம்.

இது மிகவும் முக்கியமானதொரு விடயமாகும். ஆகவே இலங்கை மீதான மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தினை தனியாகவும் பொறுப்புக்கூறல் விடயத்தினை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிலிருந்து மீளெடுத்து செயலாளர் நாயகத்திற்கு அனுப்பும் தீர்மானத்தினை வேறொன்றாகவும் நிறைவேற்றுவதா இல்லை இரண்டு விடயங்களையும் ஒரு தீர்மானமாக நிறைவேற்றுவதா என்பது தொடர்பில் தீர்மானிக்க வேண்டியுள்ளது.

இந்த விடயம் சம்பந்தமாக பிரேரணையை கொண்டுவரவுள்ள பிரித்தானியா, கனடா உள்ளிட்ட இணை அனுசரணை நாடுகள் மற்றும் அதற்கு ஆதரவளிக்கவுள்ள உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாட வேண்டியுள்ளது.

கடந்த காலங்களில் ஜனவரி இறுதி வாரத்தில் அல்லது பெப்ரவரி முதல் வாரத்தில் ஜெனிவா சென்று இந்தச் செயற்பாடுகளில் ஈடுபடுவது வழமையாகும். ஆனால் இம்முறை மெய்நிகர் வழியிலேயே இந்த விடயங்கள் அனைத்தையும் கையாள வேண்டியுள்ளது.

அத்துடன், பிரேரணையை வரையும் குழுவுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டியுள்ளது. பிரேரணை வரையும் குழுவில் வழமையாக எமது பிரதிநிதியொருவர் இடம்பெற்றிருப்பார்.

இம்முறை நேரடியாக எமது பிரதிநிதி பங்கேற்பதற்கான சந்தர்ப்பங்கள் இல்லாமையால் அவர்களுடனான இணைந்த பணிகளும் மெய்நிகர் ஊடாகவே முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனைவிடவும் இலங்கையில் உள்ள ஐ.நா.உறுப்பு நாடுகளின் தூதுரங்கள் பலவும் தாமாகவே கரிசனைகொண்டு என்னுடன் தொடர்பாடல்களையும் அடுத்தக்கட்டச் செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடி வருகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்