மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு பொருளாதார தடை

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஆணையாளரின் அறிக்கை, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு பொருளாதார தடை விதிப்பது போன்ற பரிந்துரைகளை உள்ளடக்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்சிலெடினால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த அறிக்கைக்கு பதிலளிக்க ஜனவரி 27 வரை கால அவகாசம் உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை யுத்த குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை பெறுவதற்கான சர்வதேச பொறிமுறையொன்று குறித்தும் இலங்கை தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் மிச்செல் பச்சலெட் பரிந்துரை செய்துள்ளார்.

ஆதாரங்கள் எவையும் நிருப்பிக்கப்படாதவர்களிற்கு எதிராகவே இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள ஜெயநாத் கொலம்பகே, தங்களை இழிவுபடுத்த முயற்சிக்கும் நாடுகளை விட இலங்கை மிகவும் அமைதியான மற்றும் ஸ்திரமான நாடு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த விடயத்தில் அரசாங்கம் ஒரு முடிவை எட்டியதுடன் நிலைப்பாட்டை பொதுமக்களிடம் பகிரங்கப்படுத்தும் என்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

முன்னைய அறிக்கைகளை விட இந்த அறிக்கை மோசமானது என்றும் இலங்கையில் ஆபத்தான போக்கு தென்படுகின்றது எனவும் தெரிவிக்கும் ஐ.நா. ஆணையாளரின் குறித்த அறிக்கை புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் செல்வாக்கினை அடிப்படையாக கொண்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதேவேளை பிரிட்டன் தலைமையிலான குழுவினால் பெப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெறும் யு.என்.எச்.ஆர்.சி அமர்வுகளில் முன்வைக்கப்படும் புதிய தீர்மானத்திற்கு ஒருமித்த கருத்தை வழங்குவது குறித்து இலங்கை அரசாங்கம் இதுவரை எந்த முடிவையும் எட்டவில்லை என்றும் ஜெயநாத் கொலம்பகே குறிப்பிட்டுள்ளார்


Recommended For You

About the Author: ஈழவன்