பொருளாதார நெருக்கடி ஏற்படலாம்- மோர்கன் ஸ்டான்லி!!

அமெரிக்க-சீன வர்த்தகப் போரால் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என்று சர்வதேச முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி (Morgan Stanley) தெரிவித்துள்ளது.

2008 ஆம் ஆண்டில் தவறான முதலீடுகளால் அமெரிக்காவின் பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்தது. இதனால் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஐரோப்பிய நாடுகளிலும் தாக்கம் செலுத்தியது.

பின்னர் ஆசியாவிலும் பல நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டன. இதன் விளைவாகப் பல பெரிய நிறுவனங்களும் வங்கிகளும் பொருளாதார முடக்கத்தை எதிர்கொண்டன.

இதனால், கோடிக்கணக்கான மக்கள் தொழில்களையும், தங்கள் சொத்துகளையும் இழந்தனர்.

இது ‘உலகப் பொருளாதார நெருக்கடி’என்று வரலாற்றில் குறிக்கப்படுகிறது. அதே போன்றதொரு நெருக்கடி மீண்டும் விரைவில் ஏற்படலாம் என்று முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி வங்கி தற்போது அச்சம் வௌியிட்டுள்ளது.

அமெரிக்க – சீன இடையிலான வர்த்தகப் போர் இதே நிலையில் தொடர்ந்தால், பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி மோசமாக இருக்கும், அது மீண்டும் ஒரு உலகப் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகலாம் என்பதே மோர்கன் ஸ்டான்லி வங்கியின் கணிப்பாக பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை உயர்வது, கடன் பத்திரங்களின் விலை குறைவது, பங்குச்சந்தைகளின் வீழ்ச்சி ஆகியவற்றை வைத்து, மீண்டும் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் வரி அதிகரிப்பில் ஈடுபட்டால் இன்னும் 9 மாதங்களில் புதிய பொருளாதார நெருக்கடி உலகைத் தாக்கக்கூடும் என மார்கன் ஸ்டான்லி கணித்து உள்ளது.

உள்நாட்டுப் பொருளாதார நெருக்கடியால் பிரித்தானியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் இப்போதே பாதிப்பை சந்திக்கத் தொடங்கி உள்ளன.

பிரெக்ஸிற் பிரச்சனையில் ஏற்கனவே சிக்கியுள்ள பிரித்தானியாவுக்கு பொருளாதார நெருக்கடி அடுத்த பெருந் தலையிடியாக உள்ளது.

இந்தநிலையில் உலகப் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டால் பிரித்தானியா அதனால் மிக மோசமாக பாதிக்கப்படும் நாடாக இருக்கும் என்று மோர்கன் ஸ்டான்லி வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor