
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
புனேயில் உள்ள சீரம் நிறுவனத்தின் முதலாவது முனையத்தில் நேற்று (வியாழக்கிழமை) மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில், தீயணைப்புப் படை வீரர்கள் 10 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடும் போராட்டத்திற்குப் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள போதும், கட்டுமானம் நடந்து வந்த பகுதியில் சிக்கியிருந்த ஐந்து ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, வெல்டிங் செய்யும்போது ஏற்பட்ட தீப்பொறியால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக புனே மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மருந்து இந்தியாவில் கொவிஷீல்ட் என்ற பெயரில் சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் மருந்து தயாரிக்கும் பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், தீ விபத்தினால் உற்பத்தி நடவடிக்கையில் பாதிப்பு ஏற்படவில்லை என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.