குருந்தூர் மலை தமிழர்களுக்கு சொந்தமானது

குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்ட எல்லை மீள்நிர்ணய நடவடிக்கை ஊடாகத் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை, உடன் இரத்துச் செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தமிழர்களின் நிலங்கள் மோசமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

ஆகையால், இதற்கு அவசரமான தீர்வு வேண்டும். மண்டைதீவு பகுதியில் இடம்பெற்ற காணி சுவீகரிப்பு நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தினோம். இருப்பினும், இந்த வாரம் முழுவதும் நில அளவை செய்யப்படவுள்ளது.

அதேபோல், குருந்தூர் பகுதிக்கு அண்மையில் சென்றோம். இதன்போது, அங்குள்ள காட்டு மரங்கள் வெட்டப்பட்டு, பாதைகள் செப்பனிடப்பட்டுக் கொண்டு இருந்தன.

அத்துடன், நூல்களால் எல்லையிடப்பட்டும் இருந்தது. அத்துடன், கட்டுமானத்துக்கான அத்திபாரமும் வெட்டப்பட்டிருந்தது. இதைக் கேட்டபோது, தொல்லியல் இடம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தப் பகுதி தமிழர்களுக்குச் சொந்தமானது. 2018ஆம் ஆண்டில், தமிழர்கள் இங்கு வழிபடத் தடையில்லை என முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இங்கு வழிபட அனுமதி மறுக்கப்பட்டு, இந்தப் பகுதியை புத்தமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு டிசெம்பர் மாதம், இந்தப் பகுதியில் நிலஅளவை முன்னெடுக்கப்பட்டு, எல்லை மீள் நிர்ணயம் செய்யப்பட்டு, வரைபடமொன்று தயாரிக்கப்பட்டது.

இந்த நிலஅளவைப் பணி, முல்லைத்தீவு மாவட்ட நிலஅளவை அதிகாரிகளால் முன்னெடுக்காது, கொழும்பில் இருந்து வந்த அதிகாரியால் முன்னெடுக்கப்பட்டது.

அந்த நிலஅளவை அடிப்படையிலேயே, வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், அந்த இடம் குருந்தி விகாரைக்குச் சொந்தமானது என அவ்வதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த வரைபடம் உடனடியாக இரத்துச்செய்யப்பட்டு, இது தொடர்பில் விசாரணை முன்னெடுக்க வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்