ஸ்ரீதேவியின் வாழ்க்கையையின் விம்பம் நூல்!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று நூல் ‘ஸ்ரீதேவி: கேர்ள் வுமன் சூப்பர் ஸ்டார்’ என்ற பெயரில் தயாராகியுள்ளது.

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் அனுமதியுடன் திரைக்கதை எழுத்தாளர் சத்யார்த் நாயக் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.

பென்குயின் ரேண்டம் ஹவுஸ் பதிப்பகம் அக்டோபர் மாதம் வெளியிடுகிறது.

புத்தகம் குறித்து அதன் ஆசிரியர் சத்யார்த் நாயக் பேசும் போது,

“ஸ்ரீதேவியை எப்போதும் வியந்து பார்க்கிறேன், ஒட்டுமொத்த இந்தியாவின் பிரியமான திரை ஆளுமையின் பயணத்தைக் கொண்டாடும் வாய்ப்பை இந்தப் புத்தகம் எனக்கு அளித்தது.

அவரோடு இத்தனை ஆண்டு காலம் பணியாற்றிய திரை ஆளுமைகளைச் சந்தித்து உரையாட முடிந்தது, அவர்கள் அவருடனான நினைவுகளை, கதைகளை, குழந்தை நட்சத்திரமாக இருந்து இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டாராக வளர்ந்த வரலாற்றை விவரித்தனர்.”

“இதில் பெருமைப்படும் அம்சம் என்னவென்றால் இப்புத்தகம் இந்தி சினிமாவில் அவரது ஆளுமையை விவரிப்பதோடு மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திரையுலகில் அவர் எவ்வாறு ஒரு அடையாளமாக திகழ்ந்தார் என்பதை முதன்முறையாக ஆழமாக விவரிக்கிறது.

ஸ்ரீதேவியைப் பற்றிய இந்த விரிவான விவரிப்பு நிச்சயமாக உலகம் முழுவதுமுள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படும்.

எனது கனவை நனவாக்கியதற்காக பென்குயின் பதிப்பகத்திற்கு நன்றி கடன்பட்டுள்ளேன். ஒரு தூணாக இருந்து உதவியதற்கு போனிகபூருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ஸ்ரீதேவியின் ஐம்பதாண்டு கால பயணத்தை விரிவாகவும் முதலாவதாகவும் இந்தப் புத்தகம் பதிவு செய்துள்ளதாக சத்யார்த் நாயக் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor