குவைத் பிரதமர் ஷேக் சபா இராஜினாமா!

நாடாளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டதையடுத்து குவைத் பிரதமர் ஷேக் சபா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடான குவைத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஷேக் சபா கலீத் அல் ஹமத் அல் சபா, கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

தேர்தல் முடிந்து புதிய அரசாங்கம், பதவியேற்றதும் ஷேக் சபாவை மீண்டும் பிரதமராக அரசர் ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா நியமித்தார்.

இந்த நிலையில் அமைச்சரவை அமைப்பதில் தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கவில்லை என்றும் சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற குழுக்களின் உறுப்பினர்களை தேர்வு செய்வதில் அரசாங்கத்தின் தலையீடு இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக பிரதமரிடம் கேள்வி எழுப்ப கோரும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு 30க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு ஆதரவளித்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் குழப்பம் உருவானது.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையின் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக தங்களது பதவியை இராஜினாமா செய்தனர். அவர்கள் தங்களது இராஜினாமா கடிதங்களை பிரதமர் ஷேக் சபாவிடம் வழங்கினர்.

அமைச்சர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் இராஜினாமா செய்ததால் பிரதமர் ஷேக் சபா தனது பதவியை இராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதன்படி அவர் தனது பதவியை இராஜினாமா செய்தார். அவர் தன்னுடைய மற்றும் தனது அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்களை அரசர் ஷேக் நவாப்பிடம் ஒப்படைத்தார்.


Recommended For You

About the Author: ஈழவன்