ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பொதுமக்கள் 15 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நீடிக்கிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர இருதரப்பும் கடந்த 3 மாதங்களாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதனால் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. அதேசமயம் பயங்கரவாதிகளுக்கு எதிராக இராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள நிம்ருஸ் மாகாணம் காஷ் ரோடு என்ற மாவட்டத்தில் ஆப்கானிஸ்தான் இராணுவம் தலீபான் பயங்கரவாதிகளை குறிவைத்து வான் தாக்குதல் நடத்தியது.‌

இதன்போது எதிர்பாராத விதமாக அங்குள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் குண்டுகள் விழுந்து வெடித்ததில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 15 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த வான் தாக்குதல் குறித்து ஆப்கானிஸ்தான் இராணுவம் உடனடியாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று காலை நடந்த கார் குண்டுவெடிப்பில் மக்கள் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் ஷியா வடான் என்பவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்