18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி

தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் எனவும் இதற்கான ஒத்திகை நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் எனவும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய மருந்து கிடங்கில் ஆய்வுகளை மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “முதல்வர் உத்தரவின்படி போர்க்கால அடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஏற்கெனவே ஐந்து மாவட்டங்களில் உள்ள 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடந்தது.

இதேபோன்று, அனைத்து மாவட்டங்களிலும், தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த ஒத்திகையில், காத்திருப்போர் அறை, தடுப்பூசி போடும் அறை, கண்காணிப்பு அறை ஆகியவைகளின் வடிவமைப்பு போன்றவை குறித்து ஆராயப்படும்.  100 பேருக்கு தடுப்பூசி போடும்போது எடுக்கும் நேரம், தடுப்பூசி போடுவதற்கான வசதிகள் குறித்தும் இதன்போது ஆராயப்படும்.

தமிழக அரசு சார்பில் 2020 ஜூன் மாதம் முதல் தடுப்பூசிக்கான பணிகள் தொடங்கப்பட்டு 38 மாவட்டங்களில் 51 இடங்களில் தடுப்பூசிகள் வைப்பதற்கான நடமாடும் குளிர்சாதன சேமிப்பு கிடங்குகள் தயார் நிலையில் உள்ளன.

தமிழகத்தில் தடுப்பூசிகள் செலுத்துவதற்கான ஊசிகள் ஏற்கெனவே 17 இலட்சம் கையிருப்பில் உள்ளன. மத்திய அரசு முதல் கட்டமாக 33 இலட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கியுள்ளது. அதில், 28 இலட்சம் தடுப்பூசிகள் வந்து விட்டன. இவை, மாவட்ட வாரியாக பிரித்து வழங்கப்படும்.

தடுப்பூசிக்கான மருந்தை மத்திய அரசு அளிக்கும் பட்சத்தில், அடுத்த நாளிலிருந்து தடுப்பூசி போடும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறும். அதன்படி, ஆறு இலட்சம் முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும். தமிழகத்தில், 2.50 கோடி தடுப்பு மருந்துகள் சேமித்து வைத்து கொள்ள போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்