இளம் வீரர்களை கொண்டு தயாராகும் இலங்கை!

அணியில் முக்கியமான ஐந்து வீரர்கள் உபாதைக்குள்ளாகியுள்ள நிலையில், இளம் வீரர்களை கொண்டு தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடவுள்ளது.

சென்சுரியனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் போது, சுரங்க லக்மால், கசுன் ராஜித, லஹிரு குமார, தினேஷ் சந்திமால் மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் உபாதைக்குள்ளாகினர். இதனால் இவர்கள் அனைவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை தவறவிடுகின்றனர்.

இந்தநிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், சுரங்க லக்மாலுக்கு பதிலாக துஸ்மந்த சமீர அணியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமாரவிற்கு பதிலாக, அசித்த பெனார்டோ டெஸ்ட் அறிமுகத்தை பெறலாம்.

மேலும், தினேஷ் சந்திமாலுக்கு பதிலாக லஹிரு திரிமன்னேயும், தனஞ்சய டி சில்வாவிற்கு பதிலாக மினோத் பானுக டெஸ்ட் அறிமுகத்தையும் பெறலாம்.

எனினும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அதிகாரப்பூர்வமான இலங்கை அணி விபரம் அறிவிக்கப்படவில்லை.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், தென்னாபிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாளை ஜோகனஸ்பர்க் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.


Recommended For You

About the Author: Editor