சாந்தி காணி அபகரித்தார் என நாம் கூறவில்லை – பாண்டியன் குளம் மக்கள்

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா காணி அபகரிப்பில் ஈடுபடுவதாக பண்டியன் குளம் மக்கள் தெரிவித்தனர் என வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையுமில்லை. அவ்வாறு பாண்டியன் குளம் மக்கள் கூறியதாக பொய்யான தகவலை வழங்கியவர் அதை வாபஸ் பெறவேண்டுமென பாண்டியன் குளம் மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

கிராம அபிவிருத்தி தொடர்பான கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள சாந்தி சிறீஸ்கந்தராசா நேற்று (12) பாண்டியன் குளம் பகுதிக்கு சென்றிருந்த வேளை அக்கூட்டத்தில் வைத்தே மக்கள் இவ்வாறு தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பில் மக்கள் மேலும் தெரிவிக்கையில்,

பாண்டியன் குளம் மக்கள்தான் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா காணிகளை அபகரிக்கின்றார் என கூறுவதாக, ஊடகங்களில் செய்தி வெளிவருகின்றது. ஆனால் நாம் எவருமே அவ்வாறு கூறவில்லை. அந்தக் காணியினுடைய வரலாறு எமக்குத் தெரியும்.

அதற்கும் மேலாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா, எம் மீது மிகுந்த அக்கறை கொண்டவர், எங்களுடைய கிராமத்திற்கு நிறையவே அபிவிருத்தி வேலைகளைச் செய்திருக்கின்றார். அவ்வாறான ஒரு சிறந்த மக்கள் பிரதிநிதி மீது நாம் ஏன் இவ்வாறானதொரு பொய்க் குற்றச்சாட்டை முன்வைக்கப்போகின்றோம்.

இவ்வாறு நாம் குற்றச்சாட்டை முன்வைத்தோமென ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பார்க்கும்போது எமக்கு மிகுந்த வேதனையாக இருந்தது. இவ்வாறாக உண்மைக்குப் புறம்பான வகையிலே, தன்னுடைய முகத்தை யாரெனக் காட்டாது பாண்டியன் குளம் மக்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் என்ற செய்தியை கூறியவர், அதை வாபஸ் பெறவேண்டுமெனத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


Recommended For You

About the Author: Ananya