11 சிலை கடத்தல்.. பிரான்சு பெண் கைது..!

பழமையான 11 பஞ்சலோக சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்தி விற்கமுயன்ற வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சுக்கு தப்பிச்சென்ற பெண் தொழில் அதிபர், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி கோலாஸ் நகரில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து 11 தொன்மையான சிலைகள் வெளி நாட்டிற்கு கடத்தப்பட இருப்பதாக, கடந்த 2016 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

அப்போதைய ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி, படுக்கை அறை கட்டிலுக்கு அடியில் இருந்து பழமையும் தொன்மையும் வாய்ந்த 11 பஞ்சலோக சிலைகளை கைப்பற்றினர். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் இந்த பழங்கால சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்தி விற்க திட்டமிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிறுவனத்தின் அதிபரும் வீட்டின் உரிமையாளருமான மேரி தெரசா வனினா ஆனந்தி என்ற பிரெஞ்சு குடியுரிமை பெற்ற பெண் தலைமறைவானார். சிலைகடத்தல் பிரிவு காவல்துறையினரிடம் சிக்கி விடக்கூடாது என்று பிரான்ஸ் நாட்டிற்கு தப்பிச்சென்று விட்டார்.

பொன்மாணிக்கவேலுவின் தொடர் சட்ட நடவடிக்கையால் கைது நடவடிக்கையில் தப்பிக்க எண்ணி உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரினார் வனினா ஆனந்தி. அவரது மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் , பிரான்சில் இருந்து டெல்லிக்கு வந்து உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அங்கும் அவருக்கு முன் ஜாமீன் கிடைக்கவில்லை.

இதையடுத்து சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், பெண் தொழில் அதிபர் வனினா ஆனந்தியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் பிரான்சில் இருந்து ரகசியமாக புதுச்சேரி வந்து செல்லும் திட்டத்துடன் விமானத்தில் சென்னை வந்த வனினா ஆனந்தியை குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் வைத்து சிலைகடத்தல் பெண் தொழில் அதிபர் வனினா ஆனந்தியை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க கும்பகோணம் அழைத்து சென்றுள்ளனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலுவின் இடைவிடாத தொடர் நடவடிக்கையால் வனினா ஆனந்தி தற்போது போலீசில் சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து விமான நிலையத்தில் வைத்து வனினா ஆனந்தியை கைது செய்த காவல்துறையினர், அவரை கும்பகோணத்துக்கு அழைத்துச் சென்றனர்.

கும்பகோணம் நீதிபதிகள் குடியிருப்பில், நீதிபதி மாதவ ராமானுஜம் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட வனினா ஆனந்தியை வரும் 27-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


Recommended For You

About the Author: Editor