தகனம் செய்யும் நடவடிக்கை குறித்து உடனடி தீர்மானம் வேண்டும்!

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை தகனம் செய்யும் விவகாரத்தில், அரசாங்கம் உடனடி தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பான கட்சியின் நிலைப்பாடு மற்றும் யோசனைகளை உள்ளடக்கி கடிதமொன்று, கட்சியின் பிரதித் தலைவரான ருவான் விஜேவர்தனவினால் மதத் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

உடல்களை தகனம் செய்யும் விவகாரம், மக்களின் உரிமைகளுக்கு அப்பால், தேசிய மற்றும் சர்வதேச பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் இந்த விடயத்தை பொதுவானதொரு நிலைப்பாட்டுக்கு கொண்டுவந்து உடனடியாக தீர்க்க வேண்டும் என்றும் ருவான் விஜேவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், இந்த விடயத்தில் தாமதம் அடைவதின் ஊடாக இலங்கையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த பல்வேறு சக்திகள் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்ளும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், அவ்வாறான முயற்சிகளை தோற்கடிப்பதற்காகவும், மக்களின் நம்பிக்கையை வெல்வதற்காகவும், அரசாங்கம் உடனடி தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் என ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor