ஒருவர் தன்னை தானே ஜனாதிபதி வேட்பாளராக பிரகடனம் செய்கிறார்: சரத் சாடல்

ஒருவர் தன்னைத் தானே ஜனாதிபதி வேட்பாளராக பிரகடனப்படுத்தி வருகிறார் என்று அமைச்சர் சஜித் பிரேமதாசவை மறைமுகமாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கடுமையாகச் சாடியுள்ளார்.

இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

“ஒருவர் தன்னைத் தானே ஜனாதிபதி வேட்பாளராக பிரகடனப்படுத்தி வருகிறார். தந்தை நிறுத்திய இடத்தில் இருந்து ஆரம்பிப்பேன் என்றும் கூறுகிறார்.

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் கறுப்பு ரீ சேட், டெனிம் ஜீன்ஸ் அணிந்தா மக்களை சந்திக்க மேடையேறுவது? ஒழுக்கமுள்ள தலைவன் மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

நாட்டு மக்களின் மாதச் சம்பளத்தை 50 ஆயிரம் ரூபா ஆக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமாம். இது எப்படி சாத்தியப்படும்? கள்ள நோட்டுகளை அச்சிடுவதா?

இலங்கையில் செல்வந்தர்கள் சிலரே வாழ்கின்றனர். அவர்களிடமுள்ள பணம் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என கூறுகின்றார். இதை எவ்வாறு செய்வது? பணத்தை கொள்ளையடித்து ஜனாதிபதியாக முடியுமா?.

1980ம் ஆண்டில் தந்தை தான் பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் வழங்கினார். இந்திய இராணுவத்தை தாக்கவே வழங்கப்பட்டது. ஆனால் சமாதானப் பேச்சு முறிவடைந்த பின்னர் அதனை பயன்படுத்தி எம்மை தாக்கினர். அதன்மூலமே மாங்குளம், கொக்காவில் ஆகிய பகுதிகளை கைப்பற்றினர். ஆணையிறவைச் சுற்றிவளைத்தனர்.

எனவே தந்தை செய்ததை செய்வேன் என்பது பயங்கரமானது.” இவ்வாறு சாடிய அவர் மேலும்,

கட்சித் தலைமைக்கு நான் கட்டுப்பட வேண்டும். பிரதமர் பெயரிடும் நபருக்கே எனது ஆதரவு. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கோரினால் அதனை ஏற்கவும் தயார். நாட்டின் பொறுப்பை ஏற்கும் திரண் எனக்கு இருக்கின்றது. நான் ஜனாதிபதியாகினால் நாட்டை கட்டியெழுப்புவேன். மாட மாளிகை மற்றும் முதல் பெண்மணியை உருவாக்க மாட்டேன். என்றும் தெரிவித்தார்.


Recommended For You

About the Author: Ananya