ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விபத்தில் காயம்

 

திருகோணமலை- புல்மோட்டை பிரதான வீதி நிலாவெளி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற இவ்விபத்தில் குச்சவெளி-இறக்ககண்டி பகுதியைச் சேர்ந்த ஜே.மும்தாஜ் (39வயது) மற்றும் அவரது பிள்ளைகளான பாத்திமா முபீனா (14வயது) பாத்திமா முனா (07வயது) ஆகியோரே இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

இறக்ககண்டி பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் சென்று கொண்டிருந்த வேளை சைக்கிளின் டயருக்கு காற்று சென்ற நிலையில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் தற்பொழுது திருகோணமலை விபத்து சேவைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் 14 வயதுடைய சிறுமிக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Recommended For You

About the Author: Ananya