மோடியிடம் ராகுல் வைத்த கோரிக்கை!

கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவரும் ராகுல் காந்தி, பாதிப்பிலிருந்து மீள மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. வயநாடு, மலப்புரம், இடுக்கி, கோழிக்கோடு போன்ற மாவட்டங்களில் மழை பாதிப்பு தீவிரமாக உள்ளது. மழை வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் இதுவரையில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 2.5 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அங்குள்ளவர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்.

முகாம்களில் உள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களையும் அவர் வழங்கி வருகிறார்.

ஆகஸ்ட் 11ஆம் தேதி மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் அருகேயுள்ள கவலப்பரா கிராமத்துக்குச் சென்று, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களையும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களையும் ராகுல் காந்தி பார்வையிட்டார். தனது நாடாளுமன்றத் தொகுதியான வயநாட்டிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை ராகுல் காந்தி பார்வையிட்டார். இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறி வரும் ராகுல் காந்தி, அவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். மேப்பாடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமே நிலச்சரிவு, வெள்ளத்தால் அழிந்துவிட்டதாகவும், இன்னும் நிறையப்பேர் அச்சத்தில் இருப்பதாகவும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு தனது முகநூல் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். தண்ணீர் பாட்டில், துணிகள், போர்வை, சோப், பேஸ்ட், டெட்டால், எண்ணெய், காய்கறிகள், பிரட், பிஸ்கட், பருப்பு, அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வயநாடு மக்களுக்கு வழங்கி உதவுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, கேரள மக்களின் நிவாரணத்துக்கு விரைந்து உதவ நடவடிக்கை எடுக்குமாறு நரேந்திர மோடியிடமும், கேரள முதல்வர் பினராயி விஜயனிடமும் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு அவர்கள் ஒப்புதல் தெரிவித்ததாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார். இதை அரசியலாகப் பார்க்காமல் மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து நிவாரணப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி பேசுகையில், “நிறையப் பேர் தங்களது வீடுகளையும் உடைமைகளையும் இழந்துள்ளனர். அவர்களுக்கான இழப்பீடுகள் விரைந்து கிடைக்கும் என்று உறுதியளிக்கிறோம். நிலச்சரிவில் சிக்கி சிலர் காணாமல் போயுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இது வயநாட்டுக்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு அல்ல, கேரளாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் ஏற்பட்ட இழப்பாகும்.

மத்திய அரசு இதில் தலையிட்டு உடனடி நவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக மாநிலமும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடியிடம் பேசியுள்ளேன். இதை அரசியலாகப் பார்க்காமல் மக்களுக்கு விரைந்து உதவ வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor