தாய், தந்தை இல்லாத சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!

மதுரையில் தனியார் காப்பகத்தில், தாய் தந்தை இல்லாத ஆதரவற்ற சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்து வந்த நிர்வாகியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

மதுரை சமயநல்லூர் பகுதியில், மாசா அறக்கட்டளை சார்பில் தனியார் காப்பகம் இயங்கி வருகிறது.

இந்த காப்பகத்தில் 25க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் தங்கியிருந்தனர். இந்த காப்பகத்தை கருமாத்தூரையைச் சேர்ந்த ஆதிகேசவன், ஞானப்பிரகாசம் ஆகியோர் நடத்தி வந்துள்ளனர்.

காப்பகத்தில் தங்கியிருக்கும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுவதாக, மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த புகாரின் பேரில் குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம் உள்ளிட்டோர் காப்பகத்துக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அங்குள்ள சிறுமிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 4 பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

ஆதிகேசவன், சிறுமிகளை தனது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று வன்கொடுமை செய்திருப்பதும், அதனை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியிருப்பதும் தெரியவந்திருக்கிறது.

இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிகளை முத்துப்பட்டியில் உள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள் மற்ற சிறுவர்களையும் வேறு வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இக்கொடூர சம்பவம் குறித்து சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து , ஆதிகேசவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவருடன் இருந்த மற்றொரு நிர்வாகியான ஞானப்பிரகாசத்திடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் காப்பகத்தில் நடைபெற்ற இச்சம்பவம் மதுரை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் புகாரை அடுத்து மாசா காப்பகத்துக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்,

2017ஆம் ஆண்டு பிகார் மாநிலம் முசாஃபர்நகரில் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது வெளிச்சத்துக்கு வந்து நாட்டையே உலுக்கியது.

தற்போது தமிழகத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Recommended For You

About the Author: Editor