பயங்கரவாதிகளின் தாக்குதலில் நைஜீரியாவில் 8 பேர் பலி.

நைஜிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தின் அருகில் அமைந்துள்ள ராணுவ தளத்தில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

நைஜீரியாவின் மைடுகுரி நகரிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள குபியோ கிராமத்தின் அருகில் உள்ள ராணுவ தளத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய மேற்கு ஆபிரிக்க மாகாணத்தைச் சேர்ந்த பயங்கரவாத குழுவே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘‘ராணுவ தளத்தை ஆக்கிரமிப்பதற்காக பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இயந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட 8 பாரவூர்திகளில் வந்த அவர்கள் உடனடியாக தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.

இரண்டு மணி நேரமாக இடம்பெற்ற மோதலில் 11 பயங்கரவாதிகள் உயிரிழந்ததுடன் அவர்களது 3 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன’’ என்று குறிப்பிட்டனர்.

இதேபோன்று நேற்று மைடுகுரி நகரில் இருந்து 14 மைல்கள் தொலைவில் உள்ள நெக்வாம் கிராமத்தில் போக்கோ ஹராம் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஊடுருவி வீடுகளை தீ வைத்து கொளுத்தினர். இச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.

கடந்த 10 வருடங்களில் இந்த அமைப்புகளை சேர்ந்த பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 27,000 பொதுமக்கள் உயிரிழந்தனர். 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

குறித்த ராணுவ தளத்தை கடந்த மே மாதமும் பயங்கரவாதிகள் தாக்கியமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்