தனிப்பட்ட நலனை கருத்தில் கொள்ளாது தாய் நாட்டை பாதுகாக்க வேண்டும்

எதிர்கால ஜனாதிபதியாக தெரிவாகவுள்ள கோத்தபாய ராஜபக்ஷ தனது தனிப்பட்ட நலன்களை கவனத்திற் கொள்ளாமல் தாய் நாட்டை பாதுகாக்க முதலிடம் வழங்க வேண்டும் என பல்லேகம ஹெமரதன தேரர் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருக்கு ஆசி வேண்டி ருவான்வெலிசாய விகாரையில் நேற்று விசேட சமய வழிபாடுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் பங்கேற்று ஆசி வழங்கிய போதே பல்லேகம ஹெமரதன தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த உடுவே தம்மாலோக்க தேரர், 30 வருடகால யுத்தத்தை நிறைவு செய்து ரோஜா மலர் மலரும் தேசமாக இலங்கையை மாற்றிய போதும் இடையில் கடந்த வருடங்களில் நாடு குப்பை குழியாக மாறியுள்ளதாக கூறினார்.

நாட்டு மக்களுக்கும், தேரர்களுக்கும் கடந்த காலங்களில் பல துன்பங்களை எதிர்கொள்ள நேரிட்டதாகவும், ஆகவே நாடு விழுந்துள்ள பள்ளத்தில் இருந்து மீட்டு அனைவரது முகத்திலும் புன்முறுவலை ஏற்படுத்த வேண்டும் என்பதே தேரர்களின் எதிர்பார்ப்பு எனவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தினால் நாட்டுக்கு பலமிக்க, பெருமைமிகு வேட்பாளர் ஒருவர் கிடைத்துள்ளதாகவும் உடுவே தம்மாலோக்க தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சமய வழிப்பாட்டில் ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் பாராளுமன்ற, மாகாண சபைகள் உறுப்பினர் என பலரும் கலந்துக் கொண்டனர்.


Recommended For You

About the Author: Ananya