புலிகளுக்கு எதிராக மஹிந்த எதுவும் பேசல

பிரபாகரன் உயிருடன் இருந்த போது, புலிகளுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ச ஒரு வார்த்தையேனும் பயன்படுத்தியது கிடையாது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஆனால், இன்று அவரும் அவரின் வாகையாட்களும் தாங்கள் தான் வீரர்களென மார்தட்டி கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள தொலைக்காட்சியொன்றுக்கு நேற்றிரவு வழங்கிய நேர்காணலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

சுதந்திரத்துக்கு முன்னர் ஆசியாவின் சொர்க்க பூமியாகவே இலங்கை விளங்கியது. சுதந்திரம் கிடைத்த பின்னரும் நாட்டு மக்கள் ஐக்கியமாகவே வாழ்ந்தனர். எனினும், அடிப்படைவாதிகளாலேயே நாட்டின் தலைவிதி தலைகீழாக மாறியது.

இன, மதம், குல பேதங்களால் மக்களிடையே முரண்பாடுகள் உருவாகின. இதனால், பொருளாதார ரீதியிலும் வீழ்ச்சியடைந்தோம். ஒரு காலகட்டத்தில் சிங்கபூரை இலங்கைபோல் மாற்றுவேன் என அந்நாட்டு பிரதமர் லீ குவான் அறிவித்திருந்தார்.

ஆனால், இன்று சிங்கபூர் எங்கே? நாம் எங்கே? பண்டா, செல்வா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருக்குமானால் இலங்கையில் உள்நாட்டுப் போர் இடம்பெற்றிருக்காது.

தமிழ் மக்களும் தனிநாடு வேண்டுமென கோரியிருக்கமாட்டார்கள். பிக்குகள் சிலர் போர்க்கொடி தூக்கியதாலேயே உடன்படிக்கையை கிழித்தெறிய வேண்டிய நிலை பண்டாரநாயக்கவுக்கு ஏற்பட்டது.

இதன் விளைவு பாரதூரமாக அமையும் என பண்டாரநாயக்க எச்சரிக்கை விடுத்திருந்தார். அவர் கூறியது போலவே உள்நாட்டு போர் தலைதூக்கியது.

நகத்தால் கிள்ளியெறிந்து தீர்த்து வைக்கக்கூடிய பிரச்சினையை, அடிப்படைவாதிகளே போர்க்களத்தை நோக்கி நகர்த்தினர். இதனால் 30 ஆண்டுகள் இன்னல்களை எதிர்கொண்டோம்.

இன்று மட்டுமல்ல என்றுமே தமிழ் மக்களை நேசிப்பவன் நான். இதனால்தான் புலிகள் அமைப்பிலிருந்து அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கு முற்பட்டேன்.

எனவே, புலிகள் என்மீது கடும் அதிருப்தியிலேயே இருந்தனர். என்னை கொலை செய்வதே அவர்களின் இலக்காக இருந்தது.

இதனால்தான், வீட்டிலிருந்தே தேர்தலை சந்திப்பதற்கு சந்திரிக்கா அம்மையார் வாய்ப்பளித்தார். எனினும், நான் அஞ்சவில்லை. புலிகளை தொடர்ச்சியாக விமர்சித்தேன்.

புலிகள் இயக்கம் செயற்பாட்டிலிருந்த காலப்பகுதியில் அவர்கள் தொடர்பில் ஒரு வார்த்தையேனும் வெளியாடாத மஹிந்தவும், அவரின் சகாக்களும் இன்று தம்மை தேசப்பற்றாளர்களாக காண்பித்து கொண்டு சூளுரைத்து வருகின்றனர்.

புலிகள் அமைப்பு மீண்டும் தலைதூக்கும் என்றெல்லாம் அறிவிப்புகளை விடுத்து வருகின்றனர். ஆனால், வடக்கு, கிழக்கு மக்கள், புலிகள் அமைப்பு மீண்டும் எழுச்சிபெறுவதை விரும்பவில்லை.

மீண்டுமொரு போருக்கு அவர்கள் ஒரு போதும் ஆதரவளிக்க மாட்டார்கள் என்பது உறுதி என சுட்டிக்காட்டியுள்ளார்.


Recommended For You

About the Author: Editor