தட்சிணாமூர்த்திக்கு குரு பரிகாரத்தை செய்யலாமா!!

தட்சிணாமூர்த்தி கோவில்களிலும், சன்னதிகளிலும் வியாழக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.

இவர்களில் பெரும்பான்மையினர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்களாகவே இருக்கின்றனர். நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவானும், தட்சிணாமூர்த்தியும் ஒருவர்தானா? நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவானுக்குச் செய்ய வேண்டிய பரிகாரத்தைத் தட்சிணாமூர்த்திக்குச் செய்வது சரிதானா? என்பதை அறிந்து கொள்வோம் வாருங்கள்.

தட்சிணாமூர்த்தி என்பதற்குத் தென்முகக் கடவுள் என்று பொருள். அதாவது, தெற்கு நோக்கி வீற்றிருப்பவர். நவக்கிரகங்களில் ஒருவரான வியாழ (குரு) பகவானின் திசை வடக்கு. திசையின் அடிப்படையிலேயே இருவரும் வேறுபடுகின்றனர்.

அதே போல், வியாழனுக்கு உரிய நிறம் மஞ்சள். இவருக்கு உரிய தானியம் கொண்டைக் கடலை. தட்சிணாமூர்த்தியோ வெண்ணிற ஆடையை உடுத்தியிருப்பவர். ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை முக்கியமில்லை. வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. வியாழக்கிழமைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

சிவபெருமான் ஞானத்தை போதிக்கும் குருவாக சநகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே தட்சிணாமூர்த்தி. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராக இவர் காட்சியளிக்கிறார்.

இவர் ஆதிகுரு அல்லது ஞானகுரு என்று போற்றப்படுகிறார். அதே நேரத்தில் தேவர்களின் சபையில் ஆச்சாரியனாக, தேவர்களுக்குக் குருவாகப் பணி செய்பவர் வியாழன் என்று அழைக்கப்படும் பிரஹஸ்பதி. இவரையும் குரு என்று அழைக்கின்றனர்.

ஞானகுரு வேறு, நவக்கிரக குரு வேறு என்பதைப் புரிந்து கொள்வது நல்லது.

இறைவன் இட்ட பணியைச் செய்பவர்களே நவக்கிரகங்கள். ஒன்பது கோள்களுக்கும் ஒவ்வொரு காரகத்துவம் உண்டு. இவர்களில் சுபக்கிரகமாகவும், வேண்டுகின்ற நன்மையைச் செய்பவராகவும் விளங்குபவர் வியாழ (குரு) பகவான்.

குரு பார்க்கக் கோடி நன்மை என்பது பழமொழி. ஜென்ம ராசியைக் குரு பார்த்தால் நினைத்த காரியம் கைகூடும். குருவருள் வேண்டி பரிகாரம் செய்ய விரும்புபவர்கள், வியாழக்கிழமைகளில் வியாழ பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றியும், கொண்டைக் கடலை மாலை அணிவித்தும் வழிபடலாம்.

கொண்டைக் கடலை நைவேத்யம் செய்து, வரும் பக்தர்களுக்கு வழங்கலாம். வியாழன்தோறும் விரதம் இருந்து வடக்கு முகமாய் நெய் விளக்கு ஏற்றியும் வழிபடலாம்.

அதே நேரத்தில் ஞானமார்க்கத்தை நாடும் அன்பர்கள் தட்சிணாமூர்த்தியை வழிபடலாம். வியாழக்கிழமை என்றில்லை, எந்த நாளிலும் அவரை வழிபடலாம். மனம் சஞ்சலத்திற்கு உள்ளாகும் எந்த நேரத்திலும் தட்சிணாமூர்த்தியை வழிபடலாம்.


Recommended For You

About the Author: Editor