இணைய சூதாட்டத்தால் தாய்- மகன் தற்கொலை

இணையத்தில் ரம்மி விளையாட்டில் கோடி கணக்கில் பணத்தை இழந்த பொறியியலாளர் ஒருவர் தாயுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், மேலாப்பாளையத்தைச் சேர்ந்த அருள்வேலும் அவரது தாயாரான ராஜலட்சுமியுமே இச்சம்பவத்தில் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, மேலாப்பாளையத்தைச் சேர்ந்த அருள்வேல் சென்னையில் மென்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.  இவர்  மாதத்துக்கு  1 இலட்சத்துக்கு மேல் ஊதியம் பெற்று வந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இணையத்தில் சூதாட்டம் விளையாட ஆரம்பித்த அருள்வேல், தொடக்கத்தில் சிறிய தொகை பணத்தை கட்டி ரம்மி விளையாட ஆரம்பித்துள்ளார்.

இதன்போது ஆரம்பத்தில் குறித்த விளையாட்டில் தொடர்ந்து வெற்றி கிடைத்தமையினால் கையிலிருந்த அனைத்து பணத்தையும்  செலுத்தி இணையத்தில் சூதாட்டம் விளையாடி வந்துள்ளார்.

ஆனால் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் தோல்வியை மாத்திரமே சந்தித்த அருள்வேல், தனது முழு பணத்தையும்  இழந்தார்.

இருப்பினும் திறமையாக விளையாடினால், இழந்த பணத்தை மீண்டும் பெற்றுவிடலாமென எண்ணி, சுற்றி உள்ளவர்களிடம் கடன் வாங்கியும் விளையாடியுள்ளார்.

இறுதியில் தொழிலையும் இழக்க வேண்டியேற்பட்டதுடன் கடன் தொல்லையினால் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

ஆனால் கடன்காரர்கள் அருள்வேலுக்கும் அவரது தாயாருக்கும் நெருக்கடி கொடுத்தமையினால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தாயாரான ராஜலட்சுமி, இறப்பதற்கு முன்னர் எழுதிய கடிதத்தின் ஊடாகவே தற்கொலை தொடர்பான விபரங்கள் தெரியவந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இணைய சூதாட்ட விளையாட்டுக்களை மத்திய, மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor