குடாநாட்டை முடக்கும் எண்ணம் தற்போதில்லை!

யாழ். குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை முடக்கவுள்ளதாக சில பத்திரிகைகளில் தவறான செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்றும் குறித்த செய்தியின் ஊடாக பொது மக்கள் குழப்பமடையத் தேவையில்லை எனவும் சுகாதார பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக காரைநகர் பகுதியில் கொழும்பிலிருந்து வருகை தந்த ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவரிடம் நேரடியாக தொடர்புகளைப் பேணிய 21 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களுக்கு நாளைய தினம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அந்த பரிசோதனை முடிவில் பலருக்கு தொற்று இனங்காணப்பட்டால் மாத்திரமே சில வேளைகளில் காரைநகர் பிரதேசத்தை முடக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அது தொடர்பில் இதுவரையில், எந்த தீர்மானமும் எட்டப்படவில்லை என்றும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்