கம்பெரலியாவில் ஊழல் – ஜனாதிபதி பிரதமர் கவனம் தேவை.

வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் கம்பரெலிய திட்டத்தில் ஊழல் நிறைந்துள்ளதாக மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் நாயகம் கணேஸ் வேலாயுதம் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், இதுகுறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கம்பரலிய திட்டத்தினூடாக பல திட்டங்கள் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் பல முறைகேடுகள் நடக்கின்றன. அதிலும் பல திட்டங்களிலும் ஊழல் மிக மோசமாக தலைவிரித்தாடுகின்றது.

குறிப்பாக கம்பரெலிய திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும் போது அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளும் ஊழல்களில் ஈடுபடுவதாக பலரும் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

ஆயினும் இவ் ஊழல் நடவடிக்கைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினர்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

அதேபோல இரணைமடு விவகாரம் தொடர்பான அறிக்கையை ஆளுநர் வெளியிடாமல் இருக்கின்றார். ஆகவே அந்த அறிக்கையை இனியும் தாமதப்படுத்தாமல் வெளியிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடக்கில் இடம்பெற்றதும் இடம்பெற்று வருகின்றதுமான ஊழல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி அந்த ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக அவசியமானது.

இது குறித்து ஐனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு தெரியப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும்’ என குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்