இங்கிலாந்து இமாலய வெற்றி

லண்டன்: உலக கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து.

நேற்று நடந்த லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஜேசன் ராய், ஜோ ரூட், மார்கன், ஸ்டோக்ஸ் என 4 வீரர்கள் அரைசதம் எட்டினர்.

இங்கிலாந்தில் 12வது உலக கோப்பை தொடர் துவங்கியது. முதல் போட்டியில் சொந்தமண்ணில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, தென் ஆப்ரிக்காவை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் டுபிளசி பவுலிங் தேர்வு செய்தார்.

சபாஷ் தாகிர்:

இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஜோடி துவக்கம் கொடுத்தது. முதல் ஓவரை ‘சுழல்’ இம்ரான் தாகிருக்கு கொடுத்தார் டுபிளசி. இவரது 2வது பந்தில் பேர்ஸ்டோவ் ‘டக்’ அவுட்டாக, இங்கிலாந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின் ஜோ ரூட், ஜேசன் ராய் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஜேசன் ராய் 15, ஜோ ரூட் 31வது அரைசதம் அடித்து அசத்தினர். கடந்த ஆறு இன்னிங்சில் ஜேசன் ராய் அடித்த 5வது அரைசதம் இது. 2வது விக்கெட்டுக்கு 106 ரன் சேர்த்த போது, ஜேசன் ராய் (54) அவுட்டானார். சில நிமிட இடைவெளியில் ஜோ ரூட் (51) கிளம்பினார்.

மார்கன் அபாரம்:

அடுத்து இணைந்த கேப்டன் மார்கன், ஸ்டோக்ஸ் ஜோடி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தியது. லுங்கிடி ஓவரில் அடுத்தடுத்த சிக்சர் அடித்த மார்கன், தன் பங்கிற்கு அரைசதம் விளாசினார். பிரிட்டோரியஸ் வீசிய 36 வது ஓவரில் மூன்று பவுண்டரி அடித்த ஸ்டோக்ஸ், 16வது அரைசதம் எட்டினார். 4வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்த போது மார்கன் (57), இம்ரான் தாகிர் சுழலில் சரிந்தார். அடுத்து வந்த பட்லர் (18), மொயீன் அலியை (3), லுங்கிடி திருப்பி அனுப்பினார். இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 48.4 வது பந்தில் 300 ரன்களை எட்டியது.

ரன் வேகத்தை அதிகரிக்க முயன்ற ஸ்டோக்ஸ், 89 ரன்னுக்கு அவுட்டானார். இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்தது. பிளங்கட் (9), ஆர்ச்சர் (7) அவுட்டாகாமல் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் லுங்கிடி 3, இம்ரான் தாகிர், ரபாடா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

குயின்டன் அரைசதம்:

கடின இலக்கைத் துரத்திய தென் ஆப்ரிக்க அணிக்கு குயின்டன் டி காக், ஆம்லா ஜோடி துவக்கம் தந்தது. ஆர்ச்சர் பந்தில் ‘ஹெல்மெட்’டில் அடி வாங்கிய ஆம்லா, ‘ரிட்டையர்டு ஹர்ட்’ முறையில் திரும்பினார். மீண்டும் மிரட்டிய ஆர்ச்சர் மார்க்ரம் (11), டுபிளசி (5) என இருவரையும் வெளியேற்றினார். மனம் தளராமல் போராடிய குயின்டன், 22வது அரைசதம் எட்டினார்.

இதன் பின் திடீரென சரிந்தது தென் ஆப்ரிக்கா. குயின்டன் 68 ரன்னுக்கு அவுட்டாக, டுமினி (8), பிரிடோரியஸ் (1) அடுத்தடுத்து கிளம்பினர். வான் டெர் 50 ரன் எடுத்தார். பின் வரிசையில் பெலுக்வாயோ (24), ரபாடா (11) கைவிட்டனர்.மீண்டும் வந்த ஆம்லா 13 ரன் எடுத்தார். தென் ஆப்ரிக்க அணி 39.5 ஓவரில் 207 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. லுங்கிடி (6) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்தின் ஆர்ச்சர் அதிகபட்சம் 3 விக்கெட் வீழ்த்தினார்.


Recommended For You

About the Author: Editor