கோட்டாபயவின் வெள்ளை வானிற்கு எதிராக மக்களை அணி திரட்டுவோம்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கோட்டாபயவின் வெள்ளை வான் கொடுங்கோன்மை மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களை அணி திரட்டுவோம் என நிதியமைச்சர் மங்கள சமரவீர சூளுரைத்துள்ளார்.

இது குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தனது பொறுப்புகளைக் கைவிட்டு, நாட்டைவிட்டு ஒருபோதும் தப்பியோடாத வலுவான வேட்பாளரை நிறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியானது கோட்டாவை தோற்கடிக்கும் எனவும் மங்கள தெரிவித்தார்.

மேலும் கூறிய அவர், “இந்த தேசத்தின் அடுத்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவோ அல்லது வேறு எந்த ராஜபக்ஷவோ இல்லை. அத்துடன் பல பத்திரிகையாளர்களினதும் அப்பாவிகளினதும் குருதிகள் படிந்த கைகளைக் கொண்ட குற்றவாளியோ இல்லை.

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ஜனநாயகம் என்ற தளத்திலிருந்து நீதித்துறை, பொதுச்சேவை மற்றும் ஏனைய சுயாதீனக் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கு உறுதி பூண்டவராகவும், ஐக்கிய தேசியக் கட்சியினாலும் அதன் கூட்டணிகளாலும் ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்டவராகவும் இருப்பார்” என அவர் குறிப்பிட்டார்.


Recommended For You

About the Author: ஈழவன்