யோகிபாபு நடிப்பில் மேலும் ஒரு ‘ஹாரர் காமெடி’ திரைப்படம்

தமிழ் சினிமாவில் பிசியான காமெடி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் யோகிபாபு.

இவர் நடிக்காத படமே இல்லை என்ற அளவுக்கு பெரும்பாலான ஹீரோக்களின் படங்களில் இவர் தற்போது காமெடி வேடங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி யோகி பாபு ஒரு சில படங்களில் முக்கிய வேடத்தில் அதாவது நாயகன் வேடத்திலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இதனையடுத்து தற்போது ‘காதல் மோதல் 50/50’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் யோகிபாபு நடித்து வருகிறார்.

கிருஷ்ணா சாய் இயக்கும் இந்தப் படம் ஹாரர் காமெடி படமாக விளங்கும் என்றும், மற்ற ஹாரர் காமெடி போல் இல்லாமல் இந்த படம் லாஜிக்குடன் இருக்கும் என்றும் இந்த படத்தில் ஸ்ரேயா குப்தா மற்றும் ஸ்ருதி ராமகிருஷ்ணன் ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்க உள்ளனர்.

முதல் பாதி விறுவிறுப்பாகவும், இரண்டாவது பாதியில் சில சீரியஸ் ஆன நிகழ்வுகளும் இந்த படத்தில் இருக்கும் என்றும் இயக்குனர் மேலும் தெரிவித்துள்ளார்.

‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜான் விஜய், பாலசரவணன், மயில்சாமி உள்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

ஆர்.பி.பிரதாப் ஒளிப்பதிவில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தரண்குமார் இசை அமைக்கிறார். ராஜா முகமது படத்தொகுப்பு பணியைச் செய்கிறார்.

இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் இவ்வருட இறுதியில் இந்த படம் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு ஏற்கனவே பல ஹாரர் காமெடி படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படம் அவற்றிலிருந்து வித்தியாசமான படமாக இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அது உண்மைதானா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


Recommended For You

About the Author: Editor