நல்லைக் கந்தனுக்காக உரிமைக்குரல் கொடுக்கும் உடன்பிறப்புகளே!

இலங்கையின் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளில் தனிப்பட்ட நிறுவனங்கள், அரச அமைப்புக்கள், உள்ளூராட்சி மன்றங்கள், வணக்கஸ்தலங்கள் தலையிட முடியாது என்பதை அனைவரும் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

அவ்வாறே நல்லூர் கோயில் நிர்வாகத்தினர் உற்சவ கால பாதுகாப்புத் தொடர்பில் தலையிட முடியாது.

தலைநகரில் உள்ள அனைத்து அரச – தனியார் அலுவலகங்கள், தூதரகங்கள், விமான நிலையம், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் என அனைத்து இடங்களிலும் சோதனை நடவடிக்கைகள் நடந்து கொண்டுதான் உள்ளன.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் அதைக் கடந்து கொண்டுதான் இருக்கிறோம். அப்பொழுதெல்லாம் வராத இன உணர்வும் தன்மானமும் நல்லூர் விடயத்தில் கரை புரண்டு ஓடுவதற்கு காரணம் காரணம் என்ன?

இந்தியாவில் உள்ள புராதன ஆலயங்கள் அனைத்திலும் குறித்த பாதுகாப்பு பரிசோதனைகள் நடந்து கொண்டுதான் உள்ளன. திருப்பதி பெருமாள் தொடக்கம் மதுரை மீனாட்சி வரை பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்துதான் எமக்கு அருள் பாலிக்கிறார்கள்.

இந்திய புனித யாத்திரையின் போது, VFS காரன் தொடக்கம் விமான நிலையம், கோயில் வளாகம் என்று தொடரும் ஸ்கானர் மற்றும் தடவல் சோதனைகளில் வராத வலி, நல்லூர் என்றால் வருவது ஏனோ?

வெளிநாடுகளில் உள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், வணக்கத் தலங்கள் மற்றும் ஏனைய முக்கியமான இடங்கள் அனைத்தும் இவ்வாறான பாதுகாப்பு வளையத்திற்குள்தான் உள்ளன.

உதாரணமாக அண்மையில் பிரான்ஸ் சென்றிருந்தபோது, அங்குள்ள ஈபிள் கோபுரத்தை இவ்வாறான சோதனை நடவடிக்கைகளின் பின்னரே பார்வையிட்டோம்.

வெளிநாடுகளில் எல்லாம் வராத வலி, நல்லூர் என்றால் வருவது ஏனோ?

இலங்கையில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் வணக்கத் தலங்களில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் நிரந்தரமாகவே தேவைப்படும்போது, உற்சவ கால பாதுகாப்பு நடவடிக்கைகளை தடுக்க நினைப்பது சரியா? என எங்கள் மனசாட்சியை மீண்டும் ஒரு தடவை கேட்டுப் பாருங்கள்.

நல்லூர் உற்சவ காலத்தில் யாழ்ப்பாண மாநகர சபைக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு? யாழ்ப்பாண மாநகர சபை கட்டடம் உள்ளடங்கலாக நல்லூர் ஆலயத்திற்கு உரித்தான காணிகள் பலவற்றில் யாழ்ப்பாண மாநகர சபை கட்டடங்கள் பலவற்றைக் கட்டி, வாடகை மூலம் பெறும் வருமானம் எவ்வளவு?

வருடாந்தம் யாழ்ப்பாண மாநகர சபைக்குக் கிடைக்கும் கோடிக்கணக்கான வருமானத்தில் வெறும் 25 இலட்சத்தை மக்கள் பாதுகாப்புக்காக மாநகர சபை செலவழிப்பதுதானா உங்கள் பிரச்சனை? வருடாந்த திருவிழா இல்லாவிட்டால் வருடாந்தமாக கிடைக்கும் கோடிக்கணக்கான வருமானமும் இல்லை என்பது உங்கள் மரமண்டைகளுக்கு புரியவில்லையா?

ஆகவே நல்லூர் வருடாந்த உற்சவத்தில் இடம்பெறும் நேரம் தவறாத பூசைகளில் கலந்து கொள்வதற்காக வரும் பக்தர்கள் நேர காலத்திற்கு வாருங்கள்.

பாதுகாப்பின் பொருட்டு சோதனை நடவடிக்கைகளுக்கான நேரம் தேவைப்படுவதால், பக்தர்கள் முற்கூட்டியே வந்தால் தேவையற்ற அசெகரியங்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.

அத்துடன் நல்லூர் ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பான வதந்திகள் தொடர்பில் பக்தர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக வதந்திகளைப் பரப்பும் சில இணையத்தளங்களில் வெளிவரும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை நம்ப வேண்டாம்.

உமாச்சந்திரா பிரகாஷ்


Recommended For You

About the Author: Editor