மூச்சு விடும்போது சிரமம் ஏற்பட காரணங்கள் என்ன ?

எனக்கு 25 வயது. மூச்சு விடும்போது சிரமமாக உள்ளது.

சாதாரணமாக சளி, தடிமன் நேரங்களில்தான் எல்லோருக்கும் அப்படி இருக்கும். ஆனால் , எனக்கு சாதரணமான நேரங்களிலும் அப்படித்தான் உள்ளது.

கதைக்கும்போது, தலை குளிக்கும்போது, போர்வையால் முகத்தை மூடும்போது என இந்த மூச்சுப் பிரச்சினை உள்ளது. இதற்கு தீர்வு என்ன ?
க. அபிஸ்னா கண்டி

பதில்:- மூச்சு விடும்போது சிரமமிருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. உங்களுக்கு அவற்றில் எது காரணமாக இருக்கக் கூடும் என யோசிப்போம்.

மிக முக்கிய காரணம் ஆஸ்த்மா நோயாகும். எனக்கு இழுப்பு இல்லை எனவே ஆஸ்த்மாவாக இருக்காது என நீங்கள் சொல்லக் கூடும். தடிமன் சளி இருந்தால்தான் அப்படி வரும் என்றும் இல்லை.

ஆஸ்த்மா என்பது எப்போதும் இழுப்போடு தான் வரும் என்பதில்லை. பலருக்கு நீங்கள் சொல்வது போல மூச்சு விடுவதில் சிரமம் மட்டுமே இருக்கும். சிலருக்கு நெஞ்சை இறுக்குவது போல இருக்கும். வேறு சிலருக்கு அடிக்கடி இருமலாக வெளிப்படக் கூடும்.

அத்தகைய அறிகுறிகள் எந்த நாளும் தொடர்ந்து வரவேண்டும் என்றுமில்லை சிலருக்கு இருமலானது குறிப்பிட்ட வேளைகளில் மட்டும் வரும், உதாரணமாக அதிகாலையில் மட்டும் இருமல் வரக் கூடும். அல்லது தூசு வேலை செய்தால் வரும். சிலருக்கு நீங்கள் குறிப்பட்டது போல போர்வையால் மூடும் போது வரக் கூடும். படுக்கை மெத்தை தலையணை போன்றவற்றில் மறைந்திருக்கும் கிருமி காரணமாகவும் வரலாம். குளிர்ந்த நீர் படும்போதும் வரக் கூடும்.

ஆஸ்த்மாவைத் தவிர சுவாசப்பையோடு தொடர்புடைய வேறு பல நோய்களினாலும் மூச்சு விடுவதில் சிரமம் வரலாம்.

மூக்கடைப்பு இருந்தாலும் சுவாசிப்பதில் சற்று சிரமமாக இருக்கும். ஆனால் அது பற்றிய எந்தக் குறிப்பும் உங்கள் கேள்வியில் இல்லை.

பல இருதய நோய்களினதும் அறிகுறியாகவும் மூச்சு விடுவதில் சிரமம் வரலாம். இருதயத்தில் வால்வுகள் இருக்கின்றன. அவற்றின் செயல்பாடுகளில் ஏதாவது தாக்கம் இருந்தாலும் நீங்கள் கூறிய அறிகுறிகள் வரலாம். இவை பொதுவாக வயதானவர்களிடையேதான் காணப்படும் என்றாலும் சிலரது வால்வுகளில் பிறப்பிலேயே சுருக்கம் போன்ற பாதிப்புகள் இருக்குமானால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். இருதயப் துடிப்பு ஒழுங்கில்லாத நோய்களிலும் Cardiac Arrhythmia) வருவதுண்டு. இருதய வழுவல் (Heart failure) மற்றொரு காரணம். ஆனால் உங்கள் வயதில் அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவே.

இரத்த சோகை மற்றொரு காரணம். ஒருவரது குருதியில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதே இரத்த சோகை ஆகும். இரத்தசோகையானது போசக்கற்ற உணவினால் மட்டுமின்றி வேறு நோய்கள் காரணமாகவும் வரலாம். சாதரண இரத்தப் பரிசோதனைகள் (Hb%) செய்வதன் மூலம் இதை சுலமாக கண்டறியலாம்.

அதீத எடை மற்றொரு காரணமாகும். எங்கள் எடையானது எமது உயரத்திற்கு ஏற்பவே இருக்க வேண்டும். அது அதீதமாக இருந்தால் எமது உறுப்புகளுக்கு அதற்கு ஈடுகொடுத்து இயங்க முடியாதிருக்கும்.
முக்கியமாக இருதயம் சுவாசப்பை போன்றவை போதியளவு இயங்காவிடில் இளைப்பு ஏற்படும். உயரத்திற்கு ஏற்ற எடையை உடற்திணிவு குறியீடு (BMI) கொண்டு வகைப்படுத்துவர். சாதாரணமானவர்களுக்கு 18.5 முதல் 23 வரை இருக்க வேண்டும். 23 முதல் 28 வரை அதிக எடை. 28ற்கு மேல் அதீத எடையாகும். உங்கள் எடை எதில் அடங்குகிறது எனக் கண்டறிய இணையத்தைப் பயன்படுத்தலாம்.

பல்வேறு நோய்களுக்கு, மனப்பதற்றமும் மனவழுத்தங்களும் அடிப்படைக் காரணமாக இருக்கின்றன. அதே அதேபோல மூச்சு விடுவதில் சிரமம், வேகமான மூச்செடுத்தல், நெஞ்சில் இறுக்கம் போன்ற பல பிரச்சனைகளுக்கு மனதோடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம். சிக்கல்கள் பிரச்சனைகளை எதிர்நோக்கும் தருணங்களில் அவ்வாறு ஆகலாம். அல்லது ஆழ்மனத்தில் மறைந்திருக்கும் பிரச்சனைகளால் திடீரென அத்தகைய அறிகுறிகள் தோன்றலாம்.

இவ்வாறு பல வேறுபட்ட காரணங்கள் இருப்பதால் ஒரு மருத்துவரிடம் சென்று பரிசோதித்துப் பார்த்து காரணத்தை தெளிவுபடுத்துவது நல்லது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்


Recommended For You

About the Author: Editor